குண்டும் குழியுமான கூடலூர் கேரள சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
குண்டும் குழியுமான கூடலூர் கேரள சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
கூடலூர்
கூடலூர்- கேரளா சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கூடலூர்-கேரள சாலை
கூடலூரில் இருந்து நாடுகாணி, கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் மலப்புரத்துக்கு சாலை செல்கிறது. கர்நாடகாவில் இருந்து காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கூடலூர் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக இந்த சாலையில் வாகனப்போக்குவரத்து அதிகம் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நாடுகாணி முதல் கேரள எல்லை வரை சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
குண்டும்-குழியுமான சாலை
மேலும் கடந்த மாதம் நாடுகாணி மற்றும் கீழ் நாடுகாணி மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் குண்டும் குழியுமாக இருந்த இடங்களில் மண்ணை நிரப்பினர்.
ஆனால் இதுவரை சாலை அமைப்பதற்கான எந்த பணிகளும் மேற் கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த சாலை மிகவும் பழுதான நிலையில் காணப்படுவதால் அவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.
மீண்டும் போராட்டம்
இதுகுறித்து கீழ்நாடுகாணி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, இந்த சாலையை புதுப்பிக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 5 கி.மீ. தூரமுள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
Related Tags :
Next Story