சூளகிரி அருகே பரபரப்பு: பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்-தேசிய நெடுஞ்சாலையை கடக்க மேம்பாலம் கட்ட கோரிக்கை
சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க மேம்பாலம் கட்ட கோரி, பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூளகிரி:
மாணவ-மாணவிகள்
சூளகிரி அருகே சாமல்பள்ளம் பகுதியில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படும் சாலை என்பதால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க சிரமப்பட்டு வருகிறார்கள்.
மேலும் அடிக்கடி மாணவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையை கடக்க முயன்ற மாணவர் ஒருவர் லாரி மோதி இறந்த சம்பவமும் நடந்தது. இதனால் பள்ளி அருகே சாலையை கடக்க வசதியாக மேம்பாலம் கட்ட வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று மேம்பாலம் கட்ட கோரி மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு செல்லாமல், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சர்வீஸ் ரோட்டில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாவட்ட கலெக்டர் வரும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று தெரிவித்தனர். மேலும் கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர்.
மாணவ-மாணவிகளின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், சூளகிரி தாசில்தார் நீலமேகன் மற்றும் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கண்ணீர் மல்க...
அப்போது மாணவிகள் சிலர், அந்த பகுதியில் மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி நடந்து வரும் விபத்துகள் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்தனர். உதவி கலெக்டர் தேன்மொழி, கலெக்டரிடம் தெரிவித்து மேம்பாலம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மேம்பாலம் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
இதில் சமாதானம் அடைந்த மாணவ-மாணவிகள் 3 மணி நேரத்துக்கு பிறகு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவ-மாணவிகள் திடீர் போராட்டம் காரணமாக நேற்று அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story