பழனி முருகன் கோவிலில் ஜூலை மாதம் கும்பாபிஷேகம்
பழனி முருகன் கோவிலில் வருகிற ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
பழனி:
தடுப்பூசி முகாம்
பழனி அருகே உள்ள பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதற்கு இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, கலெக்டர் விசாகன், பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
மாணவர்களுக்கு சான்றிதழ்
முன்னதாக பழனி நாதஸ்வர பள்ளியில் 3 ஆண்டுகள் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ், நாதஸ்வரம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து பழனி பகுதியில் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் பழனி முருகன் கோவிலில் உச்சிகால பூஜையில் கலந்து கொண்டு அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். அதையடுத்து மலைக்கோவில் அன்னதான கூடத்தை பார்வையிட்டார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கும்பாபிஷேகம்
பழனி முருகன் கோவிலில் நடைபெறுகிற திருப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கோவில் கருவறை மற்றும் பிற பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
மேலும் திருப்பணிகளை விரைவுப்படுத்தி வருகிற ஜூலை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஆகமவிதிப்படி 12 ஆண்டுகள் ஆகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோவில்கள், பணிகள் நிறுத்தப்பட்ட கோவில்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அங்கு பணிகளை துரிதப்படுத்தி விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன்படி தமிழகத்தில் 651 கோவில்களில் திருப்பணி மேற்கொள்வதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு நடைபெறும் பணிகள் குறித்த விவரம் இணையதளத்தில் ஏற்றப்படும்.
சித்தா கல்லூரி
பழனி பகுதியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கல்லூரிக்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள், விளையாட்டு உபகரணங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
இதேபோல் அடுத்த ஆண்டு பழனியில் சித்த மருத்துவ கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். இதற்காக தற்காலிக சித்த மருத்துவ கல்லூரி 2 மாதத்துக்குள் தொடங்கப்படும்.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில்களுக்கு சென்று புத்தாண்டை கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே பக்தர்கள் மனம் புண்படாதபடி தைப்பூச திருவிழாவை நடத்துவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார்.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு அவை மகிழ்ச்சியுடன் உள்ளது. மேலும் பல கோவில்களில் யானைகள் குளிப்பதற்கு தனி வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story