பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொட்டியம் அரசு பள்ளியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. தொட்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி
கொரோனா தடு்ப்பூசி முகாம்
சின்னசேலம் தாலுகா தொட்டியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, துணை இயக்குனர்(சுகாதாரப்பணிகள்) பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் தலைமையில் மருத்துவ அலுவலர்கள் சரண்யா, அரவிந்த் ஆகியோரை கொண்ட குழுவினர் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 325 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். இதில் தாசில்தார் ஆனந்தசயனன், தலைமையாசிரியர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சின்னசேலம், நைனார்பாளையம் அரசு பள்ளி மற்றும் மேல் நாரியப்பனூர் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அரசு உயர்நிலைப்பள்ளி
கள்ளக்குறிச்சி அருகே வாணியந்தல் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, பள்ளி சிறார் நல அலுவலர் ஜெனில்ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் தேவகி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிவண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் சுந்தர்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூரில் உள்ள அரசு அங்கவை, சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில், மருத்துவ அலுவலர் ஸ்டாலின், சுகாதார ஆய்வாளர் சங்கரன், பூபதி, சமுதாய செவிலியர் சியாமளா ஆகியோர் கொண்ட குழுவினர் மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனர்.
இந்த முகாமை விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் டி.என்.முருகன், திருக்கோவிலூர் நகரச் செயலாளர் கோபி என்கிற கோபி கிருஷ்ணன், பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் குணா என்கிற குணசேகரன், முன்னாள் கவுன்சிலர்கள் தங்கராஜ், வெங்கட், பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் வினோபா, தொ.மு.ச.நிர்வாகி சரவணன், ஒன்றிய துணை செயலாளர் சங்கர், நகர இளைஞரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், பெற்றோர்-ஆசிரியர் சங்க செயலாளர் சண்முகம் உள்பட பலர் பார்வையிட்டனர். அப்போது தலைமை ஆசிரியர் காமராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story