நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி சாலை விபத்தில் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி சாலை விபத்தில் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jan 2022 10:14 PM IST (Updated: 3 Jan 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மந்தாரக்குப்பம், 

நிரந்தர தொழிலாளி

நெய்வேலி வட்டம் 24-ஐ சேர்ந்தவர் சாலமன் (வயது 58). இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 2-ல் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று சாலமன் இரவு நேர பணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது எதிர்பாராதவிதமாக சாலமன், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

போராட்டம்

இதற்கிடையே அவரது உறவினர்கள், சாலமன் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் அவரது உடலை வாங்க மாட்டோம் என்றும் என்.எல்.சி. நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர். ஆனால் அதற்கு நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சாலமனின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து நிலக்கரி சுரங்கம்-2 முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை என்.எல்.சி. நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன் அடிப்படையில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானமுத்து, காட்டு கூணங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜான்லியோ, தமிழக வாழ்வுரிமை கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன், என்.எல்.சி. சுரங்கம்-2 பொதுமேலாளர் ராஜசேகர ரெட்டி, பெருமாள்சாமி மற்றும் சாலமனின் உறவினர்கள், தொ.மு.ச. மற்றும் அண்ணா தொ.மு.ச. நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

நடவடிக்கை

அப்போது அதிகாரிகள், நிர்வாகத்தின் போர்டு தலைமைக்கு எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டிய மனு ஒன்றை உங்களிடம் வழங்குகிறோம். அதனை நீங்கள் போர்டு தலைமையிடம் கொடுங்கள், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட சாலமனின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story