துப்பாக்கியால் சுட்டு வாலிபர் படுகொலை
திண்டுக்கல்லில், குளத்தில் மீன் பிடிக்க குத்தகை எடுத்ததில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
குத்தகை
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். அவருடைய மகன் ராகேஷ்குமார் (வயது 26). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராகேஷ்குமார், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செட்டிகுளத்தில் மீன் பிடிக்கும் குத்தகையை தனது தந்தை பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடுத்தார்.
இதனால் தினமும் இரவு நேரத்தில் குளத்து பகுதியில் காவலுக்காக தனது நண்பர்களுடன் ராகேஷ்குமார் தங்கியிருப்பார். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் ராகேஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து குளத்தின் அருகில் உள்ள திட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
துப்பாக்கியால் சுட்டனர்
அப்போது மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த மர்ம கும்பல், திடீரென்று துப்பாக்கியால் ராகேஷ்குமாரை நோக்கி சுட்டனர். இதில் அவரது வயிற்றில் விலா எலும்புக்கு கீழ் குண்டுகள் பாய்ந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள், ராகேஷ்குமாரை தூக்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், அவர்களை பின்தொடர்ந்து விரட்டிச்சென்று அரிவாளால் ராகேஷ்குமாரின் தலையில் ஓங்கி வெட்டினர்.
அப்போது உடன் இருந்த நண்பர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். அவர்களையும் சரமாரியாக தாக்கிவிட்டு மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
கடைசி நிமிட உயிருக்கு போராட்டம்
தாங்கள் தாக்கப்பட்டிருந்தாலும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராகேஷ்குமாரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்தனர். இதற்கிடையே ரத்தம் சொட்ட, சொட்ட ராகேஷ்குமார் தள்ளாடியபடி எழுந்தார்.
இதைப்பார்த்த நண்பர்கள், அவரை தாங்கிப்பிடித்து அழைத்துச்சென்று அருகில் உள்ள வீட்டுக்கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. இதையடுத்து வீட்டின் முன்பு கொடியில் காயப்போட்டிருந்த துணியை எடுத்து குண்டுகள் பாய்ந்த இடத்திலும், தலையிலும் இறுக்கமாக கட்டினர்.
ஆனாலும் தொடர்ந்து ரத்தம் வெளியேறியபடி இருந்தது. மரண விளிம்பில் இருந்த ராகேஷ்குமார் தனது கடைசி நிமிடங்கள் நெருங்குவதை உணர்ந்தார். சிறிது நேரத்தில் அவர் மயக்க நிலைக்கு சென்றார்.
பரிதாப சாவு
இதைப்பார்த்த நண்பர்கள், உடனே அவரை மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ராகேஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவலறிந்த திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி, சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வந்து துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.
5 தனிப்படைகள்
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கும் வகையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படைகளை சேர்ந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குளத்தை குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக ராகேஷ்குமாருக்கும் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (36) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததும், அதன் எதிரொலியாக இந்த கொலை நடந்திருப்பதும் தெரியவந்தது.
மேலும் பிரகாசின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மரிய பிரபு (37), ஜான்சூரியா (27), பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கணேசமூர்த்தி (23) ஆகியோருக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
4 பேர் கைது
இதையடுத்து பிரகாஷ் உள்பட 4 பேரையும் தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 4 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி, 2 அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த பயங்கர சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story