‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த குன்னம் கிராமம் அக்ரஹாரம் தெருவில் ஆபத்தான நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின்கம்பம் உள்ள பகுதியை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அக்ரஹாரம்தெருவாசிகள், சீர்காழி.
சேறும், சகதியுமான சாலை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்த பழையனூர் ஊராட்சி 2, 3, 4-வது வார்டுகளில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலை சேறும், சகதியுமாக இருப்பதால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றது. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொதுமக்கள், கூத்தாநல்லூர்.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
மயிலாடுதுறை பகுதி சீனிவாசபுரம் முதல் மஞ்சள் வாய்க்கால் வரை உள்ள சாலையில் கால்நடைகள் அதிகளவில் சற்றித்திரிகிறது. இவை இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. மேலும், சாலையில் கூட்டமாக நிற்கும் கால்நடைகள் திடீரென சண்டையிட்டுக்கொள்வதால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும் சில கால்நடைகள் அவ்வப்போது முட்டிவிடுகின்றன. இதனால் மேற்கண்ட சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கார்த்திகேயன், மயிலாடுதுறை.
மின்விளக்கு வசதி வேண்டும்
திருவாருர் அரசு நூலகத்துக்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் மற்றும் வாசகர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நூலகத்துக்கு செல்லும் சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நூலகத்துக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, மாணவ-மாணவிகள் மற்றும் வாசகர்கள் நலன் கருதி அரசு நூலகம் செல்லும் சாலையை சீரமைக்கவும், மின்விளக்கு வசதி செய்து தரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நூலகவாசகர்கள், திருவாரூர்.
சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டை பகுதி, தம்பிக்கோட்டை கீழக்காட்டில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இறுதி சடக்கு செய்வதற்காக வருபவர்கள் கரடு, முரடாக கிடக்கும் சாலையினால் மிகுந்த அவதி அடைகின்றனர். குறிப்பாக சேதமடைந்த சாலையினால் சுடுகாட்டுக்கு அமரர் ஊர்தியில் உடல்களை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், திருத்துறைப்பூண்டி.
Related Tags :
Next Story