சிதம்பரம் நகருக்கு முககவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு அபராதம் போலீசார் நடவடிக்கை
சிதம்பரம் நகருக்கு முக கவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
சிதம்பரம்,
கொரோனா அபாயம்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிவதோடு, தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் பலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கடைவீதி உள்ளிட்ட பொது இடங்களுக்கு வந்து செல்கிறார்கள். இதனால் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அபராதம்
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் சிதம்பரம் நகருக்கு முக கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று காலை சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், முரளி, பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட போலீசார் மேலவீதி, வடக்குவீதி, தெற்கு வீதி, கீழவீதி, பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் முககவசம் அணியாமல் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
விழிப்புணர்வு
மேலும் அவர்களுக்கு முக கவசம் வழங்கி, கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து பஸ் நிலையத்தில் நின்ற பேருந்துகளில் ஏறி முககவசம் அணியாமல் இருந்த பயணிகளுக்கு முக கவசம் வழங்கியதோடு, சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story