உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர்
உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தேரோட்டத்திற்கு புதிய தேர் பயன்படுத்தப்பட உள்ளது.
உடுமலை
உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தேரோட்டத்திற்கு புதிய தேர் பயன்படுத்தப்பட உள்ளது.
மாரியம்மன் கோவில் புதிய தேர்
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நோன்பு சாட்டப்பட்டு 15-வது நாளில் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடையும். மரத்தாலான இந்த தேரை பக்தர்கள் முன்னாலிருந்து இழுத்து செல்ல, தேரை பின்னாலிருந்து யானை தள்ளி செல்லும்.
இந்த கோவிலில் பழைய தேருக்கு பதிலாக புதிய தேர் செய்யப்படுகிறது. 5 நிலைகளை (அடுக்கு) கொண்ட இந்த புதிய தேரின் மொத்த உயரம் 12½ அடி. இதில் தேர்பலகை மட்டும் 9¾ அடியாகும். அதற்கு மேல் உற்சவர் உட்காரும் சிம்மாசனம் 2¾ அடி உயரத்திற்கு அமைக்கப்படுகிறது. இந்த தேருக்கு 780 கன அடி இலுப்ப மரமும், 20 கன அடி தேக்கு மரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேரின் வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், அம்மன், சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், முருகர் சிற்பங்கள் என மொத்தம் 220 சிற்பங்கள் இடம்பெறும். இதுதவிர 120 போதியல் சிற்பங்களும் இடம்பெறும்.
இந்த புதிய தேர் கட்டுமானப்பணிகள் உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள இடத்தில், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கவுதம் கைவினைத்தொழிலகம் ஸ்தபதி சி.வரதராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது. உடுமலை மாரியம்மன் கோவில் சார்பில் ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் இந்த புதிய தேர், எண்கோண வடிவில் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் பணிகள் தொடக்கம்
கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி புதிய தேர் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது.
தற்போது சுமார் 90 சதவீத பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை இந்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். பணிகள் நிறைவடைந்ததும் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெறும்.
தேர்த்திருவிழா
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்த்திருவிழா, தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேகம் விழா வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளதைத்தொடர்ந்து தேர்த்திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி நோன்பு சாட்டுதல் நடக்கிறது. 12-ந் தேதி கம்பம் போடுதல், 20-ந் தேதி மாரியம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 21-ந் தேதி தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஶ்ரீதர், செயல் அலுவலர் வி.பி.சீனிவாசன், அனுஷம் யு.எஸ்.சஞ்சீவ் சுந்தரம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story