அதிவேகமாக பரவும் கொரோனா தொற்று திறக்கப்பட்ட சில நாட்களிலேயே மும்பையில் பள்ளிகள் மூடல்
மும்பையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.
மும்பை,
மும்பையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.
பள்ளிகள் திறப்பு
கொரோனா முதல் அலையின் தாக்கம் குறைந்த பிறகும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 2-வது அலை குறைந்த பிறகே கடந்த அக்டோபர் மாதம் தான் இங்கு 8 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்தநிலையில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தொடக்க பள்ளிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியது. எனினும் ஒமைக்ரான் பரவல் காரணமாக மும்பையில் தொடக்க பள்ளிகள் திறக்கப்படவில்லை.
நீண்ட ஆலோசனைக்கு பிறகு கடந்த மாதம் 15-ந் தேதி சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு 1 முதல் 7-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.
கொரோனா அதிவேகம்
மாணவர்கள் பள்ளிக்கு ஆர்வத்துடன் சென்று வந்த நிலையில், மராட்டியத்தில் ஒமைக்ரான் தொற்றால் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பாதிப்பு பல மடங்காக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் நகரில் 8 ஆயிரத்து 63 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
எனவே மும்பையில் 3-வது கொரோனா அலை தொடங்கிவிட்டதாக கணிக்கப்படுகிறது.
மூட உத்தரவு
இந்தநிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பள்ளிகளுக்கு அதிகளவில் மாணவர்கள் வரவில்லை.
இதற்கிடையே அதிகரித்து வரும் கொரோனா, ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு மும்பையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. வருகிற 31-ந் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
இது குறித்து மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் வெளியிட்ட சுற்றறிக்கையில், 1 முதல் 9 வரை மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
10, 12-ம் வகுப்புகள்
இதேபோல பெற்றோர்களின் அனுமதியுடன் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் எனவும், முடிந்தால் இந்த வகுப்புகளுக்கும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பையில் கடந்த 2 நாட்களாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story