ஏ டி எம் எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற தொழிலாளி கைது


ஏ டி எம் எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற தொழிலாளி கைது
x
தினத்தந்தி 3 Jan 2022 10:57 PM IST (Updated: 3 Jan 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கட்டிடத்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

உடுமலை
உடுமலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கட்டிடத்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொள்ளை முயற்சி
உடுமலையில் உள்ள தளி சாலையில் குமரன் லே-அவுட் பகுதியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதி உள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.10 மணியளவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்குள் ஒருவர் சென்றார். பின்னர் அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்த எச்சரிக்கை தகவல் அந்த தனியார் வங்கியின் செல்போனுக்கு சென்றுள்ளது. அத்துடன் அந்த நேரத்தில் ஏ.டி.எம்.மையம் திறந்திருந்த தகவலும் அந்த வங்கியின் அதிகாரிக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற காட்சி பதிவாகியிருந்தது. இதுகுறித்து அந்த வங்கியின் கள அலுவலர் சங்கீத்குமார் உடுமலை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
கட்டிடத்தொழிலாளி கைது
இதைத்தொடர்ந்து உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.வி.சுஜாதா மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த மர்ம ஆசாமியை பல இடங்களில் தேடினர். 
கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த அந்த ஆசாமி உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே போலீசில் சிக்கினார். இது குறித்து இன்ஸ்பெக்டர் எஸ்.வி.சுஜாதா வழக்குப்பதிவு செய்து, அந்த மர்ம ஆசாமியை கைது செய்தார். 
விசாரணையில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் முருகன் (வயது 30) என்பதும், பொள்ளாச்சி தாலுகா கோட்டூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் கட்டிடத்தொழிலாளியான இவர் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைக்கும் சென்று வருவது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story