மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி


மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 3 Jan 2022 11:06 PM IST (Updated: 3 Jan 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

வீரபாண்டி
திருப்பூர் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
மாணவர்களுக்கு தடுப்பூசி 
திருப்பூர் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் கே.செட்டிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்ட தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு  கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- 
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் முகாம் தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இத்தகைய வயதுடையவர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இவர்களுக்கு பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. பள்ளி செல்லாத சிறார்களுக்கும் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் செலுத்தப்படுகிறது.
இந்த பணிக்காக சுகாதாரத்துறையின் பள்ளி சிறார் நலவாழ்வு திட்ட மருத்துவ குழு, நடமாடும் மருத்துவக்குழு, இதர மருத்துவ குழுக்கள், பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் முகாமிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது. இந்த வாய்ப்பினை பெற்றோர்கள் பயன்படுத்தி, தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கொரோனா பரவல் காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு தினமும் 1 முதல் 1.30 மணி நேரம் வரை (மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வி எனும் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் உள்ள அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
7,143 மையங்கள்
20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வல ஆசிரியர் என்ற வீதத்தின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் 7,143 மையங்கள் கண்டறியப்பட்டு முதற்கட்டமாக 1,416 மையங்கள் தொடர்ச்சியாக வருகிற 6 மாதங்கள் செயல்பட உள்ளன. இந்த திட்டத்தில் அதே குடியிருப்பில் வசிக்கும் பெண் தன்னார்வல ஆசிரியைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்றுகிற தன்னார்வல ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story