அரசு பஸ் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது
பல்லடத்தில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம்
பல்லடத்தில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாக்குதல்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பொள்ளாச்சியை சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 46). பல்லடம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் செல்லும் டவுன் பஸ்சில் பணியில் இருந்தார். அந்த பஸ் செட்டிபாளையம் சென்றுவிட்டு மீண்டும் பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை கல்யாணசுந்தரம் என்பவர் ஓட்டி வந்தார்.
பனிக்கம்பட்டி பிரிவில் பஸ் வந்தபோது பஸ்சை நிறுத்தி 3 பேர் ஏறினர். அவர்கள் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மதுபோதையில் பஸ்சில் ஏறிய அவர்கள் படியில் தொங்கியவாறு முககவசம் அணியாமல் பயணித்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்துனர் அங்கமுத்து சில்லரை கேட்டதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் அங்கமுத்துவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
3 பேர் கைது
இந்த தாக்குதலில் காயமடைந்த அங்கமுத்துவை பயணிகள் மற்றும் பொதுமக்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கண்டக்டர் அங்கமுத்து போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீசார் விசாரணை செய்து நடத்துனரை தாக்கிய பரமக்குடியை சேர்ந்த ராமசாமி மகன் செல்வா (22), அரியலூரைச் சேர்ந்த செல்வநாதன் மகன் ரத்தீஷ்(21), அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரகுநேஸ்வரன், (21) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story