புகார் மனு அளிக்க மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்
வீட்டுமனையை காலி செய்யக்கூறி மிரட்டுவதால் மண்எண்ணெய் கேனுடன் புகார் மனு அளிக்க வந்த பெண்னால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
வீட்டுமனையை காலி செய்யக்கூறி மிரட்டுவதால் மண்எண்ணெய் கேனுடன் புகார் மனு அளிக்க வந்த பெண்னால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 420 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெங்கடேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கீதாலட்சுமி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பார்த்திபன், தாட்கோ மேலாளர் ஏழுமலை, உதவி கலெக்டர்கள் வெற்றிவேல், கவிதா, விஜயராஜ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மண்எண்ணெய் கேனுடன் வந்த பெண்
முன்னதாக திருவண்ணாமலை தாலுகா எறையூர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ராணி (வயது 30). இவர் நேற்று தனது கைக்குழந்தையுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு அளிக்க வந்தார்.
அப்போது அவரது கையில் இருந்த கேனை போலீசார் சோதனை செய்த போது அதில் மண்எண்ணெய் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறுகையில் தனது வீட்டுமனையை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்து கொண்டு, அதை காலி செய்யக்கூறி மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மண்எண்ணெய் கேனுடன் வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அந்த பெண்ணை குறைதீர்வு கூட்டத்துக்கு அழைத்து சென்று மனு கொடுக்க செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story