12,120 மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 12,120 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 12,120 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
குமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின்கீழ் 15 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவில் கோட்டார் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு 10 முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு முதல் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு வாரத்தில் நிறைவடையும்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வண்ணம் இன்று (அதாவது நேற்று) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போடும் பணியை சென்னை போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து கோட்டார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்புகளில் மொத்தம் 74,165 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணி ஒரு வாரத்திற்குள் நிறைவடையும்.
பதிவு செய்யலாம்
குமரி மாவட்டத்திலுள்ள 15 முதல் 18 வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் இணைய தளத்தில் தங்கள் விவரங்களை பதிவிட்டு முன்பதிவு செய்யலாம். 2007- ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு பிறந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியானவர்கள். இவர்கள் கோவின் தளத்திலும் பதிவு செய்யலாம். அல்லது நேரடியாகவும் தடுப்பூசி மையத்துக்குச் சென்று பதிவிடலாம்.
நமது மாவட்டத்தில் ஒமைக்ரான் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, மாநகர நல அதிகாரி விஜயசந்திரன், தலைமை ஆசிரியர் நல்லபாக்கியலெட், வக்கீல் மகேஷ், ஆசிரியர்கள், மாணவிகள், அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 15 வயது முதல் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. முதல் நாளான நேற்று மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 120 மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story