சாமி வேடம் அணிந்து மனு கொடுக்க வந்த கிராம மக்கள்


சாமி வேடம் அணிந்து மனு கொடுக்க வந்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 4 Jan 2022 12:20 AM IST (Updated: 4 Jan 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சாமி வேடம் அணிந்து கிராம மக்கள் மனு கொடுக்க வந்தனர்.

நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சாமி வேடம் அணிந்து கிராம மக்கள் மனு கொடுக்க வந்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் முன்னிலை வகித்தார்.

இந்து தேசிய கட்சியினர் தலைவர் எஸ்.எஸ்.எஸ்.மணி, மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பொங்கல் பரிசு தொகை வழங்கக்கோரி மண்பானைகளை உடைத்து போராட்டம் நடத்தினார்கள்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “கடந்த பொங்கல் பண்டிகையின் போது அ.தி.மு.க. ஆட்சியில் ரேஷன் கார்டுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறினார். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு 21 வகையான பொருட்களை மட்டுமே பரிசாக அறிவித்துள்ளார். எனவே பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.2,500 வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

சாமி வேடம்

திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் திருக்குமரன், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் மானூர் அருகே உள்ள சம்பூத்து கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு அம்மன், சுடலைமாடசாமி உள்ளிட்ட சுவாமி வேடம் அணிந்து ஊர்வலமாக வந்தனர். தங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வழிபட இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

வள்ளியூர் அருகே உள்ள சங்கராபுரத்தை சேர்ந்தவர்கள், “எங்கள் ஊரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்” என்று கோரி மனு கொடுத்தனர்.

ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கங்கைகொண்டானில் வளைவு சாலை அமைக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பின்னர் கலெக்டரிடம்  கொடுத்த மனுவில், “நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் 25-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். பணிக்கு செல்வோர் மோட்டார் சைக்கிளில் சென்று வருகிறார்கள். சிப்காட் வளாகத்தில் இருந்து நான்கு வழிச்சாலையை கடந்து செல்வதற்கு சாலை இல்லாத காரணத்தினால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வீணாக பெட்ரோல் செலவு அதிகரிக்கிறது. சிப்காட் சாலையில் நான்கு வழி சாலையில் அமைந்துள்ள தடுப்புகளை கடந்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்படுகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் சிப்காட் சாலையில் வளைவு சாலை அமைக்க வேண்டும். மேலும் அந்த சாலையில் மின்சார விளக்கு வசதி செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story