நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயன்ற விவசாயி
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு வழங்கினர்.
அப்போது வீரவநல்லூரைச் சேர்ந்த விவசாயி சுப்பையா (வயது 81) தனது மகன் அய்யப்பனுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டரின் அலுவலகம் முன்பாக நடந்து சென்ற சுப்பையா திடீரென்று 5 லிட்டர் கேனில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
போராட்டம்
இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனே சுப்பையாவிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். உடனே போலீசாரும் விரைந்து சென்று சுப்பையா மீது தண்ணீரை ஊற்றி அழைத்து சென்றனர்.
அப்போது சுப்பையா, தனது விவசாய நிலத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை கலெக்டரிடம் மனு வழங்க செய்தனர்.
மறுகால் சுவரை அகற்ற...
சுப்பையா கலெக்டரிடம் வழங்கிய மனுவில், ‘வீரவநல்லூர் மாடன்குளம் அருகே எனது வயல் உள்ளது. அதன் அருகில் பொதுப்பணித்துறை சார்பில் கூத்தாடிகுளம் பகுதியில் 2 அடி உயர மறுகால் சுவர் கட்டப்பட்டதால், எனது வயலில் தண்ணீர் தேங்குகிறது.
இதனால் அங்கு விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே, மறுகால் சுவரை அகற்ற வேண்டும். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை’ என்று தெரிவித்து இருந்தார்.
போலீசாரிடம் அதிகாரிகள் விசாரணை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 23-10-2017 அன்று கந்துவட்டி பிரச்சினைக்காக மனு கொடுக்க வந்த கடையநல்லூர் அருகே காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து தன்னுடைய மனைவி, 2 குழந்தைகளுடன் தீக்குளித்தார். இதில் அவர்கள் 4 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வாசல்களும் பூட்டப்பட்டு, பிரதான நுழைவாயில் வழியாகவே அனைவரையும் அனுமதிக்கின்றனர். அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பொதுமக்களை கண்காணித்து உடமைகளை சோதனை செய்கின்றனர்.
எனவே, சுப்பையா மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் எப்படி நுழைந்தார்? என்பது தொடர்பாக, அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story