நெல்லையில் குடிநீர் தட்டுப்பாடு; பொதுமக்கள் அவதி


நெல்லையில் குடிநீர் தட்டுப்பாடு; பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 4 Jan 2022 1:13 AM IST (Updated: 4 Jan 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

நெல்லை:
நெல்லையில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாடு

நெல்லை மாநகராட்சி பகுதியில் நெல்லை, மேலப்பாளையம், தச்சநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய 4 மண்டலங்களில் 55 வார்டுகள் உள்ளன. நெல்லை மாநகர பகுதி வழியாகத்தான் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆனால் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள நெல்லை மாநகர பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றாலும், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.

டேங்கர் லாரியில் வினியோகம்

மேலப்பாளையம், கொக்கிரகுளம், குலவணிகர்புரம் வீரமாணிக்கபுரம், பாளையங்கோட்டை, கே.டி.சி. நகர், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களுக்கு ஒரு முறையும், பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒரு முறையும், நெல்லை மண்டல பகுதியில் சில இடங்களில் தினமும், சில இடங்களில் ஒருநாள் விட்டு ஒரு நாளும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

மேலப்பாளையம், வீரமாணிக்கபுரம், கொக்கிரகுளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அங்கு சில இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

நிரந்தர தீர்வு

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும்போது 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை. தற்போது வெள்ளம் குறைந்தாலும் மின் மோட்டார் பழுதடைந்து விட்டது, மின்சாரம் தடைபட்டு விட்டது என்று கூறி, குடிநீர் வினியோகம் செய்வதில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘நெல்லை மாநகர பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் நீரேற்று நிலையத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்று விடுகிறது.

தற்போது நீரேற்று நிலையம் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து விட்டது. சில நீரேற்று நிலையங்களில் மோட்டாரும் பழுதடைந்து விட்டது. அவற்றை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைவில் நிறைவேற்றி சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும்’ என்று தெரிவித்தனர்.

Next Story