பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 4 Jan 2022 1:23 AM IST (Updated: 4 Jan 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

அரியலூர்:

மாணவ- மாணவிகளுக்கு தடுப்பூசி
மத்திய அரசின் உத்தரவின்பேரில் நாடு முழுவதும் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டது. இதில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் 10 முதல் 12-ம் வகுப்பு பயிலும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. இதில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்து, தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கலெக்டர் ரமணசரஸ்வதி, சின்னப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் அமைச்சர் பேசுகையில், தற்போது மாவட்டத்தில் 165 பள்ளிகளில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கும், பள்ளியில் இருந்து விடுபட்டவர்களுக்கும், தொழிற்கல்வி படிப்பவர்களுக்கும் என மொத்தம் 34,800 பேருக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போதிய அளவு கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
கட்டணமில்லா தொலைபேசி எண்
எனவே 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு மாவட்ட கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077-ஐ தொடர்பு கொள்ளலாம், என்றார். முதற்கட்டமாக நேற்று மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 23 பள்ளிகளில் 3,524 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முகாமில், வருவாய் கோட்டாட்சியர் ஏழுமலை, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி, நகராட்சி ஆணையர் சித்ரசோனியா, தாசில்தார் ராஜமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்தார். இதில் மாணவ-மாணவிகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டது. அப்போது கலெக்டர் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள மொத்தம் 150 பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மொத்தம் 24,431 மாணவ-மாணவிகளுக்கும், பள்ளியில் இருந்து விடுபட்டோர் மற்றும் தொழிற்கல்வி பயில்பவர்கள் 1,669 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இந்த பணி பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதார துறையும், பள்ளி கல்வித்துறையும் இணைந்து பள்ளி வளாகம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களின் மூலம் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) 73 பள்ளிகளை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கும், நாளை (புதன்கிழமை) 73 பள்ளிகளை சேர்ந்த சுமார் 12,000 மாணவ-மாணவிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
1,800 பேருக்கு செலுத்தப்பட்டது
இதில் விடுபட்ட மாணவர்கள் மற்றும் பள்ளியில் இருந்து விடுபட்ட மாணவ, மாணவிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினசரி நடக்கும் முகாம்களிலும், ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம், என்றார். முதற்கட்டமாக நேற்று 4 பள்ளிகளில் சுமார் 1,800 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் சுப்ரமணியன், உதவி திட்ட மேலாளர் கலைமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story