ஆயிரம் ஆண்டுகள் பழமையான அய்யனார் சிலை கண்டெடுப்பு
விராலிமலை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.
ஆவூர்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், லெட்சுமணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பண்டிதர்குடிவயல் கிராமத்தின் கண்மாயில், உடைந்த நிலையிலிருந்த ஆயிரம் ஆண்டுகள் பழமைமிக்க, அய்யனார் சிற்பம் தொல்லியல் ஆர்வலர்களால் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து கீரனூரை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல்பிரசாத் ஆகியோர் கூறியதாவது:-
பண்டிதர்குடிவயல் கண்மாயின் மேற்குபுறத்தில், இரண்டாக உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அய்யனார் சிலை நான்கு அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டது. பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், புதுக்கோட்டை மாவட்ட அய்யனார் சிற்பங்கள், இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்ட வண்ணம் இருக்கும். இந்த சிற்பத்தில் சிறப்பு அம்சமாக, அய்யனார் வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்ட வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
பல்லவர்கால சிற்பம்
பல்லவர் காலத்தில், இந்தமுறையில் அமைக்கப்பட்ட அய்யனார் சிலைகள், வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருப்பினும், புதுக்கோட்டை மாவட்டத்தில், இதுபோன்று கால் மாற்றிய நிலையில் அமர்ந்துள்ள, அய்யனார் சிற்பங்கள், மிக அரிதாகவே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிற்பத்தில், முகம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. சிற்ப தோற்றத்தினை கொண்டு பார்க்கும்போது இந்த அய்யனார் சிலை, 9-ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பல்லவர்கள் கால பலகை சிற்பமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர். உடைந்த நிலையிலிருந்த சிற்பமானது நிமிர்த்தி வைக்கப்பட்டு வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இது போன்ற எண்ணற்ற அழகிய சிற்பங்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இவற்றை முறைப்படி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
Related Tags :
Next Story