சூரியனார்கோவில் ஆதீனம் மரணம்


சூரியனார்கோவில் ஆதீனம் மரணம்
x
தினத்தந்தி 4 Jan 2022 1:43 AM IST (Updated: 4 Jan 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே சூரியனார்கோவில் ஆதீனம் சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மரணமடைந்தார்.

திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே சூரியனார்கோவில் ஆதீனம் சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மரணமடைந்தார். 
சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சூரியனார்கோவில் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் 27-வது சன்னிதானமாக சங்கரலிங்க தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இருந்தார். 
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளம் கிராமத்தில் பிறந்த இவர், இளமையிலேயே இறைவழிபாட்டில் நாட்டம் கொண்டு திருவாவடுதுறை ஆதீன மடத்துக்கு வந்து துறவு பெற்றார். இந்த ஆதீனத்தில் மூத்த தம்பிரான் சுவாமிகளில் ஒருவராக இருந்து திருவெண்ணெய்நல்லூர் கிளை மடத்திலும், காஞ்சீபுரம் கிளை மடத்திலும் சேவை புரிந்தார்.
27-வது ஆதீனம் 
அதன்பின்னர் சூரியனார்கோவில் மடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு 27-வது பட்டம் பெற்று முறைப்படி ஞானபீடத்தில் எழுந்தருளி 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆதீனமாக இருந்து வந்தார். சைவ சமய வளர்ச்சியிலும், ஆதீன மேன்மையிலும் ஆர்வம் கொண்டு பல்வேறு பணிகளை மடத்தில் மேற்கொண்டார். பழமையான கோவில்களை புதுப்பித்து திருப்பணி செய்வதற்கு உறுதுணையாக இருந்து வந்தார். 
வயது முதிர்வு காரணமாக தனது 102 வயதில் நேற்று காலை 11 மணி அளவில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 
ஆதீன மட வளாகத்தில் அடக்கம் 
தொடர்ந்து தருமபுர ஆதீனம் திருநாவுக்கரசர் தம்பிரான் சுவாமிகள், காஞ்சி சங்கர மடம் சார்பில் புலவர் பாலாஜி, திருப்பனந்தாள் காசி திருமடம், தஞ்சை ராமகிருஷ்ண மடம் உள்ளிட்ட பல்வேறு மடங்களில் இருந்து துறவியர் மற்றும் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் வந்து மரணம் அடைந்த சுவாமிகளின் உடலுக்கு மாலை அணிவித்தனர். 
தொடர்ந்து ஓதுவார்கள் திருமுறை பாடல் பாட சுவாமிகள் உடலுக்கு அபிஷேகம் செய்து ஆதீன மட வளாகத்தில் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து சூரியனார்கோவில் ஆதீனத்தின் 28-வது குருமகா சன்னிதானமாக மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார்.  

Next Story