ஒமைக்ரான் அறிகுறிகளுடன் 10 பேருக்கு சிகிச்சை
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் 10 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
ஒமைக்ரான் பாதிப்பு
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஒமைக்ரான் தொற்று பரவலும், கொரோனா தொற்று பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது.
முதன்முதலாக வெளிநாட்டில் இருந்து திரும்பிய வாலிபரின் தாயாருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த வாலிபருக்கும் ஒமைக்ரான் உறுதியானது. அவர்கள் 2 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து நாகர்கோவில், மேக்காமண்டபம், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலரும் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 பேருக்கு சிகிச்சை
கடந்த சில நாட்களுக்கு முன் உகாண்டா செல்வதற்காக கொரோனா பரிசோதனை செய்ய வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி ஒமைக்ரான் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று வரையில் மொத்தம் 10 பேர் ஒமைக்ரான் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்வதற்காக சளி மாதிரிகள் சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒமைக்ரான் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் கொரோனா தொற்று பரவலின் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதி வரை 2500-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் 15 பேருக்குள்ளாக மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. கடந்த 31-ந் தேதி முதல் இந்த எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 1-ந் தேதி 1700-க்கு மேற்பட்டோருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக இருந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 43 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ.
இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனாவின் வேகத்தைக் கண்டு குமரி மாவட்ட மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Related Tags :
Next Story