நான்குவழிச்சாலை திட்டத்தை கைவிட அனுமதிக்க மாட்டோம்
கன்னியாகுமரி-களியக்காவிளை வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை கைவிட அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி-களியக்காவிளை வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை கைவிட அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
சாலைப்பணி
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட முண்டவிளை, மேக்கோடு பகுதிகளில் சாலை அகலப்படுத்தும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் முண்டவிளை முதல் ஒட்டலிவிளை வரை சுமார் 3 கி.மீ அளவில் ரூ.1.89 கோடி மதிப்பில் சாலையினை அகலப்படுத்தும் பணி மற்றும் ரூ.1.89 கோடி மதிப்பில் மேக்காமண்டபம் முதல் முட்டைக்காடு வரை சாலை அகலப்படுத்தும் பணி என மொத்தம் ரூ.3.78 கோடி மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் சாலை சீரமைப்பு குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
முதல்-அமைச்சருக்கு நன்றி
குமரி மாவட்டத்தில் சாலைகள் விரிவாக்கம், தரம் உயர்த்துதல், சாலை பாதுகாப்புக்கான கட்டுமானம் அமைத்தல், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான கட்டுமானம் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வேலைகளை உடனடியாக தொடங்க உள்ளோம். இதுவரை குமரி மாவட்டத்துக்கு, 45, 50 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு வந்ததில்லை. ஆனால் முதல்முறையாக 95 கோடி ரூபாயை சாலைக்காக மாநில நெடுஞ்சாலைத்துறை மூலமாக நாம் பெற்றிருக்கிறோம். அதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
தேசிய நெடுஞ்சாலையை பொறுத்தவரையில் காவல்கிணறு முதல் களியக்காவிளை வரையிலான சாலையில் பள்ளங்களை சீர்செய்ய ரூ.16 கோடிக்கு அனுமதி பெற்றுள்ளோம். அந்த பணிகளை முழுவீச்சில் விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
50 லட்சம் மெட்ரிக் டன் மண்
புதிய நான்கு வழிச்சாலை (கன்னியாகுமரி - களியக்காவிளை) திட்டத்தில் போதிய மண் கிடைக்கவில்லை என்று பணியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். திரும்பவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி, மண் போன்றவற்றை பக்கத்து மாவட்டத்தில் அதிகமாக இருக்கும் இடங்களில் இருந்து எடுப்பதற்கு கூடுதல் தொகை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதனால் இந்த சாலைத் திட்டம் ரத்து ஆகாது.
இந்த திட்டத்தை தவறாக தயாரித்து விட்டனர். தற்போது சுமார் 50 லட்சம் மெட்ரிக் டன் அதாவது 35 கியூபிக் மீட்டர் மண் தேவைப்படுகிறது. இவ்வளவு மண் குமரி மாவட்டத்தில் எடுக்க முடியாத நிலை இருக்கிறது. சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம், வனங்களையொட்டியுள்ள பகுதிகளாக இருக்கின்றன. அதனால் குமரி மாவட்டத்தில் மண் எடுப்பது கடினமான விஷயம். பக்கத்து மாவட்டங்களில் நதிநீர் இணைப்பு திட்டங்களின் மூலமாக கிடைக்கின்ற மண்ணை எடுப்பதற்கு கேட்டுள்ளோம். அதை எல் அன்ட் டி நிறுவனம் கட்டுப்படி ஆகாது என்று தெரிவித்துள்ளனர்.
அனுமதிக்க மாட்டோம்
அவர்கள் மத்திய அரசை அணுகி கூடுதல் தொகையுடன் டெண்டர்விட கோரிக்கை வைத்துள்ளனர். எப்படியும் திட்டத்தை கைவிடுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பழைய டெண்டர் ரத்தாகி உள்ளது. புதிய டெண்டர் கேட்டுள்ளோம். ஏனெனில் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளது. 30 சதவீத பணிகளுக்காக ரத்தாக்க முடியாது. இதுதொடர்பாக முழுமையாக நானும் பேசி வருகிறேன். தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடமும் கூறி, அவரும் மத்திய அரசுடன் பேசி வருகிறார்.
மத்திய அரசிடம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்துக்கு நிதி கேட்டுள்ளோம். அதன்பேரில் மத்திய குழுவினர் வந்து பார்த்துச் சென்றுள்ளனர். ஆனால் இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அப்படி இருக்கும்போது ஒதுக்கீடு செய்த பணத்தை செலவு செய்யவில்லை என்று அண்ணாமலை சொல்வதில் என்ன நியாயம் உள்ளது. நிதி விஷயங்களில் சுயாட்சி தத்துவம் நமக்கு வேண்டும். ஜி.எஸ்.டி. பணத்தை பல வழிகளில் வசூலித்து மத்திய அரசுக்கு கொடுக்கிறோம். ஆனால் நமக்கு தேவையாக இருக்கும்போது அந்த பணத்தை நமக்கு திரும்ப தருவதில் மத்திய அரசிடம் சுணக்கம் இருக்கிறது. இது வருந்தத்தக்கது.
இவ்வாறு அமைச்சர் மனோதங்கராஜ் கூறினார்.
நிதி உதவி
முன்னதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மகளிர் திட்டம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
இதில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்த 102 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சமும் என மொத்தம் ரூ.3 கோடியே 6 லட்சம் நிதி உதவியையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல்அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி, வேளாண்மை இணை இயக்குனர் சத்யஜோஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஜெயபிரகாஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலாஜான், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், மாநகர தி.மு.க. செயலாளர் வக்கீல் மகேஷ், தி.மு.க. மீனவரணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பசலியான் மற்றும் பல ர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story