பெங்களூருவில் லால்பாக்கில் குடியரசு தின விழா மலர் கண்காட்சி ரத்து
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக குடியரசு தினவிழாவையொட்டி லால்பாக்கில் நடக்க இருந்த மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு
பெங்களூரு லால்பாக் பூங்காவில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினவிழாயையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. இந்த நிலையில், வருகிற 26-ந் தேதி குடியரசு தினவிழாவையொட்டி லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்த தோட்டக்கலைத்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது.
லால்பாக்கில் உள்ள கண்ணாடி மாளிகையில் மறைந்த நடிகர் ராஜ்குமார், அவரது மகனான புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதி பலிக்கும் விதமாக மலர் கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கண்ணாடி மாளிகைக்குள் பல்வேறு விதமான பூக்கள், பூந்தொட்டிகளாலும் அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
கொரோனாவால் கட்டுப்பாடுகள்
இந்த நிலையில், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பெங்களூருவில் தடை விதிக்கப்பட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பரவலுக்கு மத்தியல் லால்பாக்கில் மலர் கண்காட்சி நடத்துவது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளுடன், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது லால்பாக்கில் மலர் கண்காட்சி நடந்தால் லட்சக்கணக்கானோர் கூடுவார்கள். தினமும் மலர் கண்காட்சியை பார்க்க ஆயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள். இதன் காரணமாக கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அரசு தற்போது கொரோனா காரணமாக பிறப்பித்துள்ள கட்டுப்பாடுகள், விதிமுறைகளை பின்பற்றி மலர் கண்காட்சியை நடத்தும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்காட்சி ரத்து
அதாவது கொரோனா கட்டுப்பாடுகளின்படி 300 முதல் 500 பேரை மட்டும் ஒரே நேரத்தில் கண்காட்சியை கண்டுகளிக்க அனுமதிக்கும்படி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிததுள்ளனர். ஆனால் மாநகராட்சி கட்டுப்பாடுகளை பின்பற்றி மலர் கண்காட்சியை நடத்தினால் பெருமளவு நஷ்டம் ஏற்படும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, லால்பாக்கில் வருகிற 26-ந் தேதி நடைபெற இருந்த மலர் கண்காட்சியை ரத்து செய்வதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக மலர் கண்காட்சியை எதிர்பார்த்து காத்திருந்த பெங்களூரு நகரவாசிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பாதிப்பு குறைந்தால் ஆகஸ்டில்...
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இயக்குனர் குப்புசாமி கூறுகையில், லால்பாக்கில் மலர் கண்காட்சி நடத்துவதற்கு அதிக செலவு ஆகிறது. போதிய வருமானம் கிடைப்பதில்லை. மலர் கண்காட்சிக்காக வாங்கப்படும் மலர்களின் விலையும் அதிகரித்து விட்டது. பெங்களூருவில் கொரோனா பாதிப்பும் அதிகரித்து விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் கட்டுப்பாடுகளுடன் மலர் கண்காட்சி நடத்தினால், நஷ்டம் ஏற்படும்.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் குடியரசு தினவிழா மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தின் போது கொரோனா பாதிப்பு குறைந்திருந்தால், லால்பாக்கில் மலர் கண்காட்சி கண்டிப்பாக நடத்தப்படும், என்றார்.
Related Tags :
Next Story