கர்நாடகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து 6-ந் தேதி மந்திரிசபையில் முடிவு - பசவராஜ் பொம்மை அறிவிப்பு


கர்நாடகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து 6-ந் தேதி மந்திரிசபையில் முடிவு - பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Jan 2022 2:26 AM IST (Updated: 4 Jan 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து 6-ந் தேதி நடக்கும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

நிபுணர் குழு

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. மொத்த பாதிப்பில் 80 சதவீதம் தலைநகர் பெங்களூருவில் பதிவாகிறது. இதனால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  நாட்டில் கொரோனா-ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அண்டை மாநிலங்களான கேரளா, மராட்டிய மாநிலங்களிலும் பாதிப்பு அதிவேகமாக பரவத்தொடங்கியுள்ளது. கர்நாடகத்திலும் கொரோனா-ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவினருடன் நாளை (அதாவது இன்று) ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளேன்.

கடுமையான கட்டுப்பாடுகள்

  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கவாதவாறு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்குமாறு நிபுணர் குழுவிடம் கேட்டுள்ளோம். நிபுணர் குழுவினர் கூறும் ஆலோசனைகளை மந்திரிசபை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும். இந்த மந்திரிசபை கூட்டம் 6-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது. இதில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து முடிவு எடுத்து அறிவிப்போம்.

  15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இன்று (நேற்று) தொடங்கி வைத்துள்ளேன். இது சிறுவர்களை கொரோனாவிடம் இருந்து காப்பாற்றும். இந்த பணியை தீவிரப்படுத்துவோம். சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை வெற்றிகரமானதாக ஆக்க சுகாதாரத்துறை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டியது அவசியம்.

பாதயாத்திரை

  கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மேகதாது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளனர். கொரோனா பரவும் இந்த நேரத்தில் அவர்களின் நடவடிக்கையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த விஷயத்தில் நாங்கள் ஆலோசித்து உரிய முடிவு எடுப்போம்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story