கர்நாடகத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான்
கர்நாடகத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
ஒமைக்ரான் பாதிப்பு
கர்நாடகத்தில் கொரோனாவுடன் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை 66 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் 8 பேருக்கும், தார்வாரில் 2 பேருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் பாதிக்கப்பட்ட 8 பேர்களில் 5 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 10 பேரில் 2 குழந்தைகள் உள்ளனர். மற்ற 8 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்.
கண்டறிந்து பரிசோதனை
அமெரிக்காவில் இருந்து வந்த 19 வயது இளைஞர், பெல்ஜியத்தில் இருந்து வந்த 40 வயது பெண், துபாயில் இருந்து வந்த 46 வயது நபர் மற்றும் 49 வயதுடைய 2 பெண்கள். 13 வயது சிறுமிக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவரிடம் இருந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து வந்த 42 வயது, 65 வயது பெண்கள் இருக்கிறார்கள்.
மேலும் 14 வயது சிறுமி, 53 வயது பெண் ஆகியோருக்கு உள்ளூர் தொடர்பில் இருந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேரும் அறிகுறிகள் இல்லை. ஆனால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த 10 பேருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்துள்ளோம்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story