கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை மிகப்பெரிய சவாலாக இருக்கும் - பசவராஜ் பொம்மை பேச்சு
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
கொரோனா 3-வது அலை
நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க விழா பெங்களூருவில் மூடலுபாளையா பைரவேஸ்வரா நகரில் உள்ள அரசு உயர் தொடக்கப்பள்ளி-பி.யூ.கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தார். பிறகு அவர் பேசியதாவது:-
15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி அவர்களின் உடல்நிலையை பாதுகாப்பது மிக முக்கியம். அதனால் இந்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக செயல்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இது மிகப்பெரிய சவாலாக இருக்கும். கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது.
ஒத்துழைப்பு அவசியம்
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இந்த கொரோனா பரவலை வேறு விதமாக சமாளிக்க வேண்டும். பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வருவதை மனதில் வைத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை.
அண்டை மாநிலங்களில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அந்த மாநிலங்களின் ஒட்டியுள்ள கர்நாடக எல்லை பகுதிகளில் வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, எல்லைகளில் தீவிரமாக கண்காணிப்பது, பரிசோதனையை கட்டாயப்படுத்துவது, தடுப்பூசி போட்டு இருப்பதை உறுதி செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
பெங்களூருவில் 5,482 பள்ளிகள் மற்றும் 577 பி.யூ.கல்லூரிகளில் 4 லட்சத்து 41 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story