பெங்களூருவில் பிரபல கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
பெங்களூருவில் போலீஸ்காரரை கல்லால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற பிரபல கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
ஆயுதங்களால் தாக்கி கொள்ளை
பெங்களூரு சித்தாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பயாஜ். இவர், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சித்தாபுரா மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், பயாஜை ஆயுதங்களால் தாக்கிவிட்டு விலை உயர்ந்த செல்போனை கொள்ளையடித்து சென்றிருந்தனர். மர்மகும்பல் தாக்கியதில் பயாஜ் பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர். அப்போது பிரபல கொள்ளையனான பர்வேஜ் பாஷா, அவரது கூட்டாளிகள் தான் பயாஜை தாக்கி செல்போனை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பர்வேஜ் பாஷா, அவரது கூட்டாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு தலைமறைவாக இருந்த பர்வேஜ் பாஷாவை சித்தாபுரா போலீசாா் கைது செய்தார்கள்.
போலீஸ்காரர் மீது தாக்குதல்
அவரிடம் நடத்திய விசாரணையில், பயாஜை தாக்கி செல்போன் கொள்ளையடித்ததை, அவர் ஒப்புக் கொண்டார். இந்த கொள்ளைக்கு பயன்படுத்திய கத்தி, பிற ஆயுதங்களை பனசங்கரி 6-வது ஸ்டேஜ், சிக்கேகவுடனதொட்டி, பி.டி.ஏ. லே-அவுட் பகுதியில் உள்ள புதர் பகுதியில் வீசி இருப்பதாக பர்வேஜ் பாஷா தெரிவித்தார். உடனே அந்த ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக பர்வேஜ் பாஷாவை, பி.டி.ஏ. லே-அவுட்டுக்கு சித்தராபுரா போலீசார் அழைத்து சென்றார்கள்.
அங்குள்ள புதரில் இருந்து கத்தி, பிற ஆயுதங்களை எடுத்து போலீசாரிடம் பர்வேஜ் பாஷா கொடுத்தார். பின்னர் திடீரென்று புதரில் கிடந்த கற்களை எடுத்து போலீஸ்காரர்கள் மீது வீசி தாக்கினார். இதில், போலீஸ்காரர் பரமேஸ்வருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து பர்வேஜ் பாஷா தப்பி ஓடுவதற்கு முயன்றார். உடனே சித்தாபுரா இன்ஸ்பெக்டர் ராஜூ தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு முறை சுட்டுவிட்டு சரண் அடைந்து விடும்படி பர்வேஜ் பாஷாவை எச்சரித்தார்.
துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
ஆனால் அவர் சரண் அடைய மறுத்துவிட்டார். அங்கு கிடந்த கற்களை எடுத்து மீண்டும் போலீசாரை தாக்க முயன்றதும், தப்பி ஓடுவதற்கும் முயற்சி செய்தார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜூ தன்னிடம் இருந்த துப்பாக்கியால் பர்வேஜ் பாஷாவை நோக்கி ஒருமுறை சுட்டார். இதில், அவரது காலில் குண்டு துளைத்தது. இதனால் அவர் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தார்கள்.
பின்னர் போலீஸ்காரர் பரமேஸ்வர், கொள்ளையன் பர்வேஜ் பாஷா அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பர்வேஜ் பாஷா பிரபல கொள்ளையன் என்பதும், அவர் மீது கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பர்வேஜ் பாஷாவின் கூட்டாளிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story