அரசு விழாவில் மந்திரி-காங்கிரஸ் எம்.பி. இடையே மோதல்; ‘மைக்’ உடைக்கப்பட்டதால் பரபரப்பு


அரசு விழாவில் மந்திரி-காங்கிரஸ் எம்.பி. இடையே மோதல்; ‘மைக்’ உடைக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Jan 2022 2:46 AM IST (Updated: 4 Jan 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

ராமநகரில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் விழா மேடையில் மந்திரியும்-எம்.பி.யும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு:

காங்கிரஸ் பாதயாத்திரை

  கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்படுகிறது. பெங்களூரு நகரின் குடிநீர் தேவை மற்றும் மின்உற்பத்தி நோக்கத்திற்காக இந்த அணையை கட்ட கர்நாடக அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

  இந்த திட்டத்திற்காக விரிவான திட்ட அறிக்கை மத்திய ஜல்சக்தி துறை மற்றும் மத்திய அரசுக்கு கர்நாடகம் அனுப்பி வைத்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தின் டெல்டா பகுதிகள் வறண்டுவிடும் என்று தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து இந்த திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி பாதயாத்திரை நடத்துவதாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் பாதயாத்திரை நடத்தினால் அரசியல் ரீதியாக தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பா.ஜனதா கருதுகிறது.

அடிக்கல் நாட்டு விழா

  இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று ராமநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். ராமநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கர்நாடக அரசு விழாவில் அம்பேத்கர், கெம்பேகவுடா ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா மற்றும் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

  இதில் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, அம்பேத்கர், கெம்பேகவுடா சிலைகளை திறந்து வைத்தார். வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இக்கட்டான நிலை

  இதில் ராமநகர் மாவட்ட பொறுப்பு மந்திரியும், உயர்கல்வித்துறை மந்திரியுமான அஸ்வத் நாராயண் அனைவரையும் வரவேற்று பேசினார். அவர் பேசியபோது, மேடையின் முன்பு அமர்ந்திருந்த பொதுமக்கள், டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் வாழ்க என்று கோஷமிட்டனர். இதனால் அஸ்வத் நாராயணுக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது.

  அந்த கோஷத்திற்கு பதிலளித்து பேசிய அஸ்வத் நாராயண், "வெறும் கோஷங்களை போட்டால் மட்டும் போதாது. வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். தனிப்பட்ட தலைவர்கள் வளர்ந்தால் போதாது. இந்த பகுதியின் வளர்ச்சிக்கு யாரும் எந்த பணிகளையும் செய்யவில்லை. பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளோம்" என்றார்.

எம்.பி.- மந்திரி மோதல்

  இதனால் மேடையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் கோபமடைந்தார். அவர் உடனே தனது இருக்கையை விட்டு எழுந்து நேராக அஸ்வத் நாராயணிடம் வந்தார்.

  பின்னர் அவர் ‘நீங்கள் என்ன வளர்ச்சி பணிகளை செய்துள்ளீர்கள், நாங்கள் எதை செய்யவில்லை’ என்று கோபமாக கேட்டார். அதற்கு அஸ்வத் நாராயணும் கோபத்துடன் பதிலளித்தார். இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 2 பேரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். டி.கே.சுரேஷ், மந்திரியை அடிக்க பாய்ந்தார். அதுபோல் மந்திரி அஸ்வத் நாராயணும், டி.கே. சுரேசை தாக்க முயற்சித்தார்.

மைக் உடைப்பு

  இதை கவனித்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அதிர்ச்சி அடைந்தார். உடனே கீழே இருந்த போலீசார் ஓடிவந்து டி.கே.சுரேசையும், அஸ்வத் நாராயணையும் சமாதானப்படுத்தி விலக்கினர். அதைத்தொடர்ந்து அஸ்வத் நாராயண் தொடர்ந்து பேச முயற்சி செய்தார்.

  அப்போது அங்கு இருந்த டி.கே.சுரேசின் ஆதரவாளரும், மேல்-சபை உறுப்பினருமான ரவி, மைக்கை பிடுங்கி உடைத்து எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

மேடையிலே தர்ணா

  பிறகு மந்திரி அஸ்வத் நாராயணை கண்டித்து டி.கே.சுரேஷ் எம்.பி., முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் இருக்கையின் முன்பகுதியில் மேடையிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது அங்கு நிலவிய பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியது.

  உடனே அங்கு இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைத்தனர். அதன் பிறகு விழாவில் அவரும் பேசினார்.

  முன்னதாக விழாவில் பங்கேற்றிருந்த காங்கிரஸ் கட்சியினரும், பா.ஜனதாவினரும் குரல் எழுப்பினர். இதனால் அங்கு இரு கட்சியினர் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை எழுந்தது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கோஷம் எழுப்பிய காங்கிரசாரை அங்கிருந்து வெளியேற்றி அப்புறப்படுத்தினர்.

குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்

  இதைத்தொடர்ந்து பேசிய பசவராஜ் பொம்மை, "நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக ராமநகருக்கு வந்துள்ளேன். வளர்ச்சி பணிகள் விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம். தேவை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

  அதன் பிறகு விழா அமைதியாக நடந்து முடிந்தது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையிலேயே மந்திரியும், எம்.பி.யும் மோதிக்கொண்ட சம்பவம் ராமநகர் மட்டுமின்றி கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேனர்கள் கிழிப்பு

  இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து டி.கே.சுரேசின் ஆதரவாளர்கள், ராமநகரில் அரசு விழா தொடர்பாக கட்டப்பட்டிருந்த அஸ்வத் நாராயண் பேனர்களை கிழித்து எறிந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

  மேடையில் நடைபெற்ற கலாட்டா சம்பவத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, அவரது மனைவி அனிதா குமாரசாமி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

யாருக்கு செல்வாக்கு என்பதில்...

  ராமநகர் மாவட்டத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்), பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளுக்கும் இடையே யாருக்கு செல்வாக்கு என்பதில் அடிக்கடி வார்த்தை போர் ஏற்பட்டு வருகிறது. அதாவது ராமநகர் தொகுதி எம்.பி.யாக டி.கே.சுரேஷ் உள்ளார். கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.வாக டி.கே.சிவக்குமார் உள்ளார். அதுபோல் ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும், சென்னப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ.வாக குமாரசாமியும் உள்ளனர்.

   இந்த நிலையில் மாவட்ட பொறுப்பு மந்திரியாக அஸ்வத்நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் மாவட்டத்தில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த பல நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இதனால் 3 கட்சி தலைவர்களுக்கும் அடிக்கடி வார்த்தை மோதல் நீடித்து வந்த நிலையில் நேற்று விழா மேடையிேலயே டி.கே.சுரேஷ் மற்றும் மந்திரி அஸ்வத் நாராயண் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநகரில் நடைபெற்ற அரசு விழாவில் நடந்த கலாட்டா குறித்து மாநில காங்கிரஸ் தலைவரும், டி.கே.சுரேசின் சகோதரருமான டி.கே.சிவக்குமார் கூறுகையில், "ராமநகருக்கும், மந்திரி அஸ்வத் நாராயணுக்கும் என்ன தொடர்பு உள்ளது. ராமநகரின் வளர்ச்சிக்காக அவர் என்ன செய்துள்ளார். குமாரசாமி ராமநகர் மாவட்டத்தை அமைத்து வளர்ச்சி பணிகளை செயல்படுத்தினார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இதை நான் சொல்கிறேன். ஆனால் அஸ்வத் நாராயண் என்ன செய்துள்ளார். அவர் ஏதாவது பணிகளை செய்திருந்தால் அதுகுறித்து பட்டியல் ஒன்றை வெளியிட வேண்டும்" என்றார்.


Next Story