சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி- அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டமாக 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர் -சிறுமிகளுக்கு தடுப்பூசி போடும் பணியினை தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 92 பள்ளிக்கூடங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியின் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு கலைமகள் பெண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியினை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
523 பள்ளிக்கூடங்கள்
ஈரோடு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர். 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் 1 லட்சத்து 4 ஆயிரத்து 106 பேர் உள்ளனர்.
இதில், பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் 92 ஆயிரத்து 652 பேர் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 286 அரசு பள்ளிக்கூடம், 25 அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம், 221 தனியார் பள்ளிக்கூடம், 28 ஆதிதிராவிடர் நல பள்ளிக்கூடம், 15 மாநகராட்சி பள்ளிக்கூடம், ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடம் உள்பட மொத்தம் 523 பள்ளிக்கூடங்கள் உள்ளன.
18,634 பேருக்கு...
தடுப்பூசி போடும் பணி முதல் நாளான இன்று (அதாவது நேற்று) 92 பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் 18 ஆயிரத்து 634 பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்காக 452 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, 60 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பவட்டவர்களுக்கு இதுவரை முதல் தவணை தடுப்பூசி 15 லட்சத்து 88 ஆயிரத்து 357 பேருக்கு, அதாவது 87.80 சதவீதம் பேருக்கும், 2-ம் தவணையினை 11 லட்சத்து 31 ஆயிரத்து 802 பேர், 67.06 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 15 வயது முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம், மாநகராட்சி மருத்துவ அலுவலர் சுஜாதா, தலைமை ஆசிரியை ஹேனா சசிகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story