தென்னை- பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும்- மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு


தென்னை- பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும்- மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு
x
தினத்தந்தி 4 Jan 2022 3:23 AM IST (Updated: 4 Jan 2022 3:23 AM IST)
t-max-icont-min-icon

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு
தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனு பெற்றார். ஈரோடு கொல்லம்பாளையம் எல்.ஜி.ஜி.எஸ். காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்திருந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஈரோடு கொல்லம்பாளையம் எல்.ஜி.ஜி.எஸ். காலனி பகுதியில் அரசு தொடக்க பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் உள்ள ரோட்டில் தெரு விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் குடிமகன்கள் குடித்துவிட்டு கண்ணாடி பாட்டில்களை உடைத்து ரோடுகளில் வீசியும், பள்ளிக்கூடத்தின் ஜன்னலை உடைத்தும் செல்கின்றனர். பள்ளிக்கூட வளாகத்துக்குள் பாட்டில் உள்ளிட்ட பல பொருட்களை வீசுவதால் மாணவ -மாணவிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு கொசு தொல்லையும் அதிக            அளவில்  உள் ளது. எனவே எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாயை தூர்வாரி, குடிமகன்கள் இங்கு வந்து குடிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
கள் இறக்க அனுமதி
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு தலைமையில் நிர்வாகிகள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
கொப்பரை தேங்காய் விலை கடந்த சில வாரங்களாக ரூ.110-ல் இருந்து ரூ.85 ஆக சரிந்து விட்டது. இதனால் அரசு உடனடியாக அனைத்து கொப்பரை தேங்காய் பருப்புகளை நிபந்தனை இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும். விலை வீழ்ச்சியை தடுக்க அண்டை மாநிலமான கேரளாவை போல் தென்னை, பனை மரங்களில் கள் இறக்குவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும். இதை அனுமதித்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
மேலும் மது பிரியர்களின் உடல் நலம் 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்கும். பெரும்பாலும் அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். ஆர்கானிக் முறையில் தயார் செய்யப்படும் விளைபொருட்களுக்கு நல்ல வரவேற்பும், நல்ல விலையும் கிடைக்கிறது. எனவே பொதுமக்கள் நலனுக்காகவும், விவசாயிகள் நலன் காக்கவும் இயற்கையாக கிடைக்கும் தென்னை, பனை மரங்களில் உற்பத்தி செய்யும் கள் இறக்க அனுமதி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
283 மனுக்கள்
இதபோல் மொத்தம் 283 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.6 ஆயிரத்து 450 மதிப்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.
மேலும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவிகளுக்காக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதல் 3 இடங்களை பெற்ற 16 மாணவ -மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டன. 
திண்டல் பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படிக்கும் மாணவி ச.மதுமிதா பேச்சுப்போட்டியில் தான் வெற்றிபெற்ற ரூ.5 ஆயிரம் பரிசு தொகையினை முதல் -அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். கூட்டத்தில் துணை கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story