குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுைக
புஞ்சைபுளியம்பட்டி அருகே சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள்.
குடிநீர் வினியோகம்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட விண்ணப்பள்ளி, எரப்பப்பநாயக்கன்பாளையம், அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்களுக்கு தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த சில மாதங்களாக 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டனர்.
முற்றுகை
இந்தநிலையில் நேற்று காலை விண்ணப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சீரான குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட முடிவெடுத்தனர். முன்னதாக அவர்கள் விண்ணப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.
இதையடுத்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாவேசு, மைதிலி, புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, ஊராட்சி தலைவர் ஜெயமணி கணேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விரைவில் நடவடிக்கை
அப்போது ஊராட்சி தலைவர், 'கூட்டு குடிநீர் திட்டத்தில் விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு குறைந்த அளவே குடிநீர் வழங்கப்படுவதால், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. ஆனாலும் விரைவில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
பொதுமக்கள் இதை ஏற்றுக்கொண்டு சாலை மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றார்கள்.
Related Tags :
Next Story