11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர், சிகிச்சைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு


11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர், சிகிச்சைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 4 Jan 2022 2:11 PM IST (Updated: 4 Jan 2022 2:11 PM IST)
t-max-icont-min-icon

உதவும் கரங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவடி பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கந்தல் ஆடையுடன் சுற்றித்திரிந்த 50 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதித்த ஒருவரை, உதவும் கரங்கள் அமைப்பினர் மீட்டனர். திருவேற்காட்டில் உள்ள உதவும் கரங்கள் மையத்தில் அவருக்கு தேவையான மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. 3 மாத சிகிச்சைக்கு பின்பு அவர் ஓரளவுக்கு மனநல பாதிப்பில் இருந்து மீண்டார். பின்னர் நடத்திய விசாரணையில் அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சத்தியநாராயண் ஜெய்ஸ்வால் என்பது தெரியவந்தது. பின்னர் மேற்குவங்க மாநில தன்னார்வ அமைப்பின் உதவியுடன் சமூகவலைதளம் மூலம் அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டு பேசினர்.

அதில் சத்தியநாராயண் ஜெய்ஸ்வால் 2010-ம் ஆண்டு மாயமானது தெரியவந்தது. அவ்வப்போது மாயமாகும் சத்தியநாராயண், 2010-ம் ஆண்டும் மாயமான போது திரும்பி வந்துவிடுவார் என அவரது உறவினர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அவர் திரும்பி வரவில்லை. இதனால் 2014-ம் ஆண்டு அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இந்தநிலையில் தான் சத்தியநாராயண் ஜெய்ஸ்வால், உதவும் கரங்கள் அமைப்பு மூலம் மீட்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இதற்காக உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் பாப்பா எஸ்.வித்யாகர், சமூக ஆர்வலர்கள் ஜேக்கப், சீனிவாசராவ், சந்திரிகா ஆகியோருக்கு சத்தியநாராயணின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story