ரவுடிகளை ஒடுக்க, பட்டியல் தயாரிக்க உத்தரவு இட்ட தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர்
புதிதாக அமைக்கப்பட்டு உள்ள தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரான ரவி, நேற்று சென்னை புறநகரில் உள்ள பல்லாவரம், சங்கர் நகர், குன்றத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், அந்த போலீஸ் நிலையங்களில் உள்ள ரவுடிகள் பட்டியலை தயார் செய்து, ரவுடிகளை ஒடுக்கவேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், கஞ்சா விற்பனை செய்பவர்கள் பட்டியலை தயார் செய்ய வேண்டும். வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? அவர்களை பற்றிய விபரங்களையும், வழக்குகளில் கைது செய்யப்படாமல் உள்ளவர்கள் விவரங்களையும் தயார் செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும் போலீஸ் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை உள்ளதா? கூடுதலாக எந்த போலீஸ் நிலையங்களில் போலீசார் நியமிக்கப்படவேண்டும் என்ற விவரங்களையும் கேட்டறிந்தார்.
சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிகள் பட்டியலை தயாரிக்கும்படி தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளதால் ரவுடிகள் கலக்கத்தில் உள்ளனர். அத்துடன் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரகத்தின் சார்பில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் செயல்பட தொடங்கி உள்ளது. 8525007100 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். அதன் மீது உடனடியாக விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story