‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 4 Jan 2022 6:06 PM IST (Updated: 4 Jan 2022 6:06 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அபாயம் நீங்கியது; மக்கள் நிம்மதி



சென்னை எம்.எம்.டி.ஏ. மாத்தூர் 2-வது மெயின் ரோட்டில் மின் இணைப்பு பெட்டி கதவுகள் இல்லாமல் அபாயகரமான நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். தாறுமாறாக சென்ற மின்சார வயர்கள் பெட்டிக்குள் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளது. அபாயம் நீங்கியதால் அப்பகுதி மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். உடனடி நடவடிக்கை எடுத்த மின்சார வாரியத்துக்கும், உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளனர்.

புதிய சாலை தேவை

சென்னை பெருங்குடி புழுதிவாக்கம் ஜெயாநகர் தாராபாரதி தெருவில் சாலை வசதி அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. எனவே தற்போது இந்த சாலை மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் மிகுந்த சிரமத்துக்கு இடையே இந்த தெருவை பயன்படுத்தி வருகிறோம். எனவே சென்னையில் புதிதாக சாலை அமைக்கும்போது எங்கள் பகுதிக்கும் சாலை வசதி செய்து தர வேண்டும்.

-பொதுமக்கள்.

ஆபத்தான பள்ளம் சீரமைக்கப்படுமா?



சென்னை ஆதம்பாக்கம் பாலாஜிநகர் 16-வது தெருவில் 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் சாலையில் ஏற்பட்ட பழுது (வீராணம் கால்வாய் ஒட்டிய பகுதி) இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது. தற்போது பெய்த மழையால் மேலும் பழுதடைந்து உள்ளது. வாகனங்கள் பள்ளத்தில் சரிந்து விழும் பேராபத்து உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்.

-வெங்கடேசன், ஆதம்பாக்கம்.

மழையால் சாலை சேதம்

சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட 7-வது வார்டில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, இணைய மஹாலில் இருந்து பெரியார் நகர் நோக்கி செல்லும் சாலை மழையால் பாதிக்கப்பட்டு கடுமையாக சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.

-அருள் காமராஜ், சமூக ஆர்வலர்.

நாய்கள் தொல்லை அதிகரிப்பு

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 90-வது வார்டில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் மிகுந்த அச்சத்துடன் வெளியே சென்று வரும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள்.

வாகன ஓட்டிகள் சிரமம்



சென்னை மந்தவெளி பஸ்நிலையம் அருகே உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூம் மற்றும் பஸ் நிறுத்தம் எதிரே சாலையின் நடுவே பாதாள சாக்கடை பள்ளம் போன்று உள்ளது. இதனை கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை உள்ளது. எனவே பெரிய விபத்துகள் நேரிடும் முன்பாக இந்த புகார் மீது அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

-சி.சேதுராமன், சமூக ஆர்வலர்.

பலவீனமான பயணிகள் நிழற்குடை



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கிணார் ஊராட்சியில் கிணார் ஓடை பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை பழதடைந்து, விரிசலுடன் மிகவும் பலவீனமாக உள்ளது. இந்த நிழற்குடையில்தான் பள்ளி மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். எப்போது இடிந்து விழுமோ? என்ற அபாயகரமான நிலையில் இருக்கும் இந்த பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும்.

-முகேஷ்குமார், கிணார்.

இருள் சூழ்ந்த தெரு

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கென்னடி சதுக்கம் குறுக்கு தெருவில் உள்ள தெருவிளக்குகள் எரியாமல் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்காக அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-யுவராஜ், பெரம்பூர்.

பாதாள சாக்கடை அடைப்பால் அவதி

சென்னை கொரட்டூர் வடக்கு சீனிவாசபுரம் முதல் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை அடைப்பு பிரச்சினை 3 நாட்களாக இருக்கிறது. சாலை முழுவதும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறோம். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

-பத்ரிநாராயணன், கொரட்டூர்.

சாலை வசதி வேண்டும்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை ஊராட்சி 3-வது வார்டில் உள்ள சிமெண்ட் சாலைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாகவும், சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். மழைக் காலங்களில் தெருக்களில் தேங்கும் நீரில் விஷப்பூச்சிகள் வருவதாலும் பொதுமக்களும், குழந்தைகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே இப்பகுதிக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும்.

-ப.கவிமதன், வள்ளுவப்பாக்கம்.

Next Story