நெல் கொள்முதல் நிலைய விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பிரச்சினை எழுவது ஏன்?


நெல் கொள்முதல் நிலைய விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பிரச்சினை எழுவது ஏன்?
x
தினத்தந்தி 4 Jan 2022 8:11 PM IST (Updated: 4 Jan 2022 8:11 PM IST)
t-max-icont-min-icon

நெல் கொள்முதல் நிலைய விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பிரச்சினை எழுவது ஏன்? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி கேட்டுள்ளது.

மதுரை, 
கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவடையான நெல், வினியோகம் செய்ய தாமதமானதால் மழையில் நனைந்து வீணாகிறது என பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
அதை பார்த்த நீதிபதிகள் புஷ்பாசத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர், நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்து ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும் இது போன்ற தகவல்கள் வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்யும்படியும், இந்த விஷயத்தில் இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளதாகவும் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் அதே நீதிபதிகள், வழக்குகளை விசாரித்தனர். அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த குழுக்களில் விவசாயிகளும் இடம் பெற்றுள்ளனர். எனவே இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே பிரச்சினை, அதே பாதிப்பு மீண்டும் மீண்டும் எழுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே கே.கே.ரமேஷ் என்பவர் இதுதொடர்பாக கடந்த ஆண்டு நான் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை தற்போது விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்று முறையிட்டார்.
இதையடுத்து நெல் கொள்முதல்நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த விவகாரத்தில் ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப் படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படியும், கே.கே.ரமேசின் வழக்கை அடுத்த வாரத்தில் பட்டியலிடும்படியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story