ஐகோர்ட்டு உத்தரவுப்படி பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
ஐகோர்ட்டு உத்தரவுப்படி பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
பொள்ளாச்சி
ஐகோர்ட்டு உத்தரவுப்படி பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்து உள்ளனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரி கிருஷ்ணகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி 8 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒலிப்பெருக்கி மூலம் நடைபாதை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீன்கரை ரோட்டில் சீனிவாசபுரம் ரெயில்வே பாலத்தில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன் ஆக்கிரமிப்பு பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி பொறியாளர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது சிலர் தாங்களே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நகர பகுதியில் நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வீடுகளுக்கு நோட்டீஸ்
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது. நகரில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் உள்ள தள்ளுவண்டி கடைகளை தாமாகவே அகற்றினர். மீன்கரை ரோட்டோரத்தில் சில வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி 10 நாட்கள் வரை அவகாசம் கொடுக்கப்படும். அதன்பிறகு அவர்கள் காலி செய்யவில்லை என்றால் மின் இணைப்பை துண்டித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.முதல் நாளில் சீனிவாசபுரத்தில் இருந்து திருவள்ளுவர் திடல் வரைக்கும் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள், வியாபாரிகள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி நெடுஞ்சாலைத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story