ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு பணி தொடக்கம்


ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு பணி தொடக்கம்
x
தினத்தந்தி 4 Jan 2022 9:04 PM IST (Updated: 4 Jan 2022 9:04 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு பணி தொடக்கம்

ஊட்டி

124-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.

நாற்று நடவும் பணி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. கோடை சீசனையொட்டி இங்கு மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2019, 2020-ம் ஆண்டுகளில் மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. வருகிற ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. 

124-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடும் பணி நேற்று தொடங்கப்பட்டது. கலெக்டர் எஸ்.பி.அம்ரித் பூந்தொட்டிகளில் மலர் நாற்றுகளை நட்டு வைத்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலா மேரி, உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- 

275 ரகங்கள்

தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நட மலர் பாத்திகள், நடைபாதை ஓரங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஜெரேனியம், சைக்லமன், சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரெனன்குலஸ், புதிய ரக ஆர்னமென்டல்கல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியா, இன்கா மேரிகோல்டு, பிகோனியா, கேன்டீ டப்ட், பென்டாஸ், பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், வெர்பினா, சன்பிளவர், சிலோசியா, ஆன்டிரைனம், வயோலா, லைமோனியம், அஸ்டில்மே, ருட்பெக்கியா, டொரினியா உள்பட 275 வகையான விதைகள் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு நர்சரியில் மலர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டது.

5.5. லட்சம் நாற்றுகள்

275 ரகங்களை சேர்ந்த 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. கோடை சீசனையொட்டி நடப்படும் நாற்றுகளுக்கு பனி தாக்கம் ஏற்படாத வகையில் கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு பாதுகாக்கப்படுகிறது. மலர் கண்காட்சியையொட்டி மலர் மற்றும் கண்ணாடி மாளிகையில் 35 ஆயிரம் மலர் தொட்டிகள் அடுக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story