ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி
ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி
கூடலூர்
கூடலூர், பந்தலூர் தோட்ட தொழிலாளர்களிடம் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூடலூர் போலீஸ் நிலையத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.
ஏலச்சீட்டு வசூலிப்பு
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆயிரக்கணக்கான தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களிடம் கூடலூரை தலைமை யிடமாக கொண்டு வார ஏலச்சீட்டு நிறுவன ஊழியர்கள் சிலர் மாதந்தோறும் சீட்டு பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் செலுத்திய பணத்துக்கு இதுவரை பொருட்களும் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களிடம் தோட்டத் தொழிலாளர்கள் பணத்தை திருப்பித்தருமாறு பலமுறை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் செலுத்திய பணமும் வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் நேற்று தனியார் ஏலச்சீட்டு நிறுவன அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் அங்கு அலுவலகம் மூடப்பட்டு இருந்தது.
போலீஸ் நிலையம் முற்றுகை
தோட்ட தொழிலாளர்கள் விசாரித்ததில் ஏலச்சீட்டு நிறுவன அலுவலகம் நீண்ட நாட்களாக மூடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த கூடலூர், நடுவட்டம், பந்தலூர், சேரம் பாடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் நேற்று பகல் 12 மணிக்கு கூடலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் தொழிலாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வார சீட்டு ரூ.240 என 20 வாரங்கள் பணம் செலுத்தியும் பொருட்கள் வழங்கவில்லை. பணமும் திரும்ப தரவில்லை. பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து உள்ளனர். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.
கலைந்து சென்றனர்
உடனே போலீசார் இதுபோன்ற பிரச்சினைகளை ஊட்டியில் உள்ள பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசிடம் புகார் அளிக்க வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story