ஊட்டியில் மீண்டும் உறைபனி தாக்கம் தொடங்கியது
ஊட்டியில் மீண்டும் உறைபனி தாக்கம் தொடங்கியது
ஊட்டி
ஊட்டியில் மீண்டும் உறைபனி தாக்கம் தொடங்கியது. குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரியாக பதிவானது.
உறைபனி தாக்கம்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். இதை தொடர்ந்து டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுவது வழக்கம்.
சமீப நாட்களாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி முதல் உறைபனி தாக்கம் தொடங்கியது.
நாளுக்கு நாள் உறைபனி அதிகரித்ததால் கடுங்குளிர் நிலவியது. கடந்த 30-ந் தேதி வரை உறைபனி தாக்கம் காணப்பட்டது. 31-ந் தேதி முதல் காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
மீண்டும் உறைபனி
மேலும் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் பகலில் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. நேற்று முன்தினம் ஊட்டி நகரில் வெயில் அடித்தது. மாலையில் கடும் குளிர் நிலவியது. இந்தநிலையில் நேற்று அதிகாலை ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் மீண்டும் உறைபனி தாக்கம் காணப்பட்டது.
பிங்கர்போஸ்ட், எச்.பி.எப்., காந்தல் மற்றும் அவலாஞ்சி, கோரகுந்தா உள்ளிட்ட வனப்பகுதிகளில் புல்வெளி களின் மீது உறை பனி படர்ந்து இருந்தது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் பசுமையான புல்வெளிகள் மீது வெள்ளை நிறத்தில் உறைபனி காணப் பட்டது.
2 டிகிரி செல்சியஸ்
வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் முகப்பு கண்ணாடி மற்றும் மேற்பகுதியில் வெள்ளை கம்பளம் விரித்தது போல் உறைபனி இருந்தது.
இதனால் கடும் குளிர் நிலவியது. காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் புல்வெளிகளில் உறைபனி படர்ந்து இருப்பதை கண்டு ரசித்தனர்.
ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.
வெப்பநிலை மிகவும் குறைந்ததால் வழக்கத்துக்கு மாறாக குளிர் அதிகமாக இருந்தது. 4 நாட்களுக்கு பின்னர் மீண்டும் உறைபனி தாக்கம் காரணமாக வீடுகளில் சமையல் மற்றும் பிற பயன்பாட்டுக்காக தண்ணீர் சூடாக நீண்ட நேரம் ஆகிறது. குளிரால் வெது, வெதுப்பான தண்ணீரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
உறைபனி தாக்கத்தால் புற்கள் மற்றும் தேயிலை செடிகள் கருகும் அபாயம் உள்ளது.
Related Tags :
Next Story