விவசாயிகள் முற்றுகை போராட்டம்
விவசாயிகள் முற்றுகை போராட்டம்
பல்லடம்,
கள்ளப்பாளையம் தனியார் பிளாஸ்டிக் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாசுக் கட்டுப்பாட்டு வரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
முற்றுகை
பல்லடம் அருகே கள்ளப்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அமைப்பு மற்றும் பள்ள பாளையம் விவசாயிகள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறும்போது “ பள்ளபாளையத்தில் உள்ள தனியார் பேப்பர் மில்லால் அந்தப் பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், சாமளாபுரம் அருகே உள்ள கள்ளப்பாளையம் பகுதியில் இயங்கும் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையிலிருந்து நச்சுப்புகை வெளிவந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முற்றுகைப் போராட்டம் நடத்தினோம்” என்றார்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து விவசாயிகளிடம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சாமிநாதன், பல்லடம் தாசில்தார் தேவராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கள்ளப்பாளையம் தனியார் பிளாஸ்டிக் ஆலை இனி செயல்படாது என்றும், உடுமலை பள்ளபாளையம் பேப்பர் மில் உள்ள பகுதியில் மண், நிலத்தடி நீர், காற்று ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துனர். இதனால் முற்றுகைப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
முற்றுகைப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், திருப்பூர் மாநகர தலைவர் கோகுல் ரவி, கொள்கை பரப்புச் செயலாளர் குண்டடம் ராசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், பல்லடம் வட்டாரத் தலைவர் வேலுமணி, நகரத்தலைவர் மைனர் தங்கவேல், மற்றும் ஏர்முனை இளைஞர் அமைப்பு மற்றும் பள்ளபாளையம் விவசாயிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story