பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர்கள் வழங்கினார்கள்


பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர்கள்  வழங்கினார்கள்
x
தினத்தந்தி 4 Jan 2022 9:25 PM IST (Updated: 4 Jan 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர்கள் வழங்கினார்கள்

குண்டடம், 
பொங்கலுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன்,  கயல்விழி ஆகியோர் வழங்கினார்கள். 
பொங்கல் பரிசு தொகுப்பு 
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 21 வகையாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி  பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.  அதன்படி மாநிலம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள  ருத்ராவதி ரேஷன் கடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு விலையில்லா வேட்டி -சேலை மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ஏலக்காய் முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 வகையான பொருட்களை வழங்கினர்.
விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்கள்,   முகாம்களில் தங்கி உள்ள இலங்கை  தமிழர் குடும்பங்கள்  உள்பட  2 கோடியே  15 லட்சத்து  48 ஆயிரத்து  60 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.  இதற்காக ரூ.1158 கோடியே  28 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரருக்கும் ரூ.538 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படுகிறது.   திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து  83 ஆயிரத்து  755 ரேஷன் கார்டு தாரர்கள் பயன் அடைவார்கள்.  இதற்காக ரூ.42 கோடியே 16 லட்சத்து  60 ஆயிரத்து  190 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
 விழாவில் தாராபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. காளிமுத்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன், தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், தாராபுரம் தாசில்தார் சைலஜா, தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, குண்டடம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன் (மேற்கு), சிவசெந்தில்குமார் (வடக்கு), தி.மு.க. ருத்ராவதி பேரூர் செயலாளர் ஆர். ஜி.முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர் கவிதாசெந்தில்குமார், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், சடையபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன், தி.மு.க. துணை ஒன்றிய செயலாளர் மயில்சாமி, பேரூர் இளைஞரணி செயலாளர் அன்பு, மாவட்ட பிரதிநிதி தனசேகர், குண்டடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குருவம்மாள், அய்யாசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி, குண்டடம் இன்ஸ்பெக்டர் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
பயிர்கடன் தள்ளுபடி சான்றிதழ்
அதை தொடந்து  விவசாயிகளுக்கு  பயிர்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் 12 பயனாளிகளுக்கு முதியோர்  உதவி தொகை ஆணை வழங்கப்பட்டது. ருத்ராவதி பேரூராட்சியில் கட்டப்பட்ட கலையரங்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. 

Next Story