திருப்பூரில் ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்


திருப்பூரில்  ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 4 Jan 2022 9:37 PM IST (Updated: 4 Jan 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

அனுப்பர்பாளையம், 
திருப்பூரில்  ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ஒருவழிப்பாதை
திருப்பூர் மாநகரில் குமரன் ரோடு, ஊத்துக்குளி ரோடு, பார்க் ரோடு, மேம்பால சாலை, ராயபுரம் ரோடு உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் முக்கிய சந்திப்பாக ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் பகுதி உள்ளது. இதில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பி.என்.ரோடு, அவினாசி ரோடு, ஊத்துக்குளி ரோடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பார்க் ரோடு வழியாக வந்து, ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தை கடந்து செல்கின்றன. 
இதேபோல் பி.என்.ரோடு மற்றும் அவினாசி ரோட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் ரெயில்வே மேம்பாலம் வழியாக குமரன் ரோடு வந்து செல்கின்றன. இந்த நிலையில் பார்க் ரோட்டில் இருந்து ரெயில் நிலையம் பஸ் நிறுத்தம் வழியாக மேம்பாலம் செல்ல வேண்டிய வாகனங்களில் பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் ரெயில் நிலையம் செல்லாமல் அதற்கு முன்பாக உள்ள ஒருவழிப்பாதை வழியாக சென்று மேம்பாலத்தை அடைகின்றன.
விதிமீறும் வாகன ஓட்டிகள்
 தினமும் ஏராளமான வாகனங்கள் சாலை விதிமுறையை மீறி இந்த வழியாக செல்கின்றன. இதனால் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்களும், ஊத்துக்குளி ரோட்டில் இருந்து குமரன் ரோட்டிற்கு செல்லும் வாகனங்களும் ஒருவழி பாதையில் வரும் வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன், உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதேபோல் வாகன ஓட்டிகளுக்குள் வாக்குவாதமும் ஏற்படுகிறது. அங்கு ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்லக்கூடாது என்பதற்காக திரும்பும் இடத்தில் போலீசார் இரும்பு தடுப்பான் வைத்துள்ளனர். 
ஆனால் அதையும் மீறி இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. விதிமுறையை மீறும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதிப்பதுடன், வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
மாநகரின் மையப்பகுதியில் இதுபோன்ற சாலை விதிமுறை மீறல்கள் நடப்பதை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story