தேனி மாவட்டத்தில் 517 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்


தேனி மாவட்டத்தில் 517 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம்
x
தினத்தந்தி 4 Jan 2022 9:45 PM IST (Updated: 4 Jan 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் 517 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

தேனி:
தேனி மாவட்டத்தில் 517 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. 
பொங்கல் பரிசுத்தொகுப்பு
ஏழை, எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்வதற்காக தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் முழு கரும்பு வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. தேனி மாவட்டத்தில் இந்த பரிசு தொகுப்பு வழங்கும் பணியின் தொடக்க நிகழ்ச்சி தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த விழாவில், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, துணைப்பதிவாளர்கள் சேகர், முத்துக்குமார், சலீம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
517 ரேஷன் கடைகள்
இதையடுத்து மாவட்டம் முழுவதும் 517 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு வினியோகம் செய்யும் பணி தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசு தொகுப்பை வாங்கிச் சென்றனர்.
மாவட்டத்தில் சில இடங்களில் பரிசுப் பொருட்கள் வினியோகம் செய்வது தொடர்பான விவரங்கள் ரேஷன் கடைகளில் பயன்படுத்தும் மின்னணு விற்பனை கருவிகளில் பதிவேற்ற தாமதம் ஏற்பட்டது. இதனால், ரேஷன் கடைகளில் 2 மணி நேரத்துக்கும் மேல் பொதுமக்கள் காத்திருந்தனர். சில கடைகளில் பிற்பகல் 12 மணிக்கு பிறகு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதால், அதன்பிறகு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. 
சமூக இடைவெளி
கொரோனா வைரஸ் 3-வது அலை வேகமாக பரவி வருவதால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாவட்டத்தில் பல இடங்களில் சமூக இடைவெளியின்றியும், முக கவசம் அணியாமலும் மக்கள் வரிசையில் காத்திருந்தனர். கடை விற்பனையாளர்கள் பலரும் முக கவசம் அணியாமல் பணியாற்றினர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறந்ததால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இனிவரும் நாட்களில் ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story