ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் விவசாயிகள் போராட்டம்


ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2022 9:47 PM IST (Updated: 4 Jan 2022 9:47 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்:
திருச்செந்தூரில் இருந்து நெல்லை மாவட்டம் அம்பை வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக, ஸ்ரீவைகுண்டம் யூனியன் ஸ்ரீமூலக்கரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கீழபுளியங்குளம் குளத்தில் சட்ட விதிமுறைகளை மீறி சரள் மண் அள்ளப்படுவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சரள் மண் அள்ள அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியும் அ.தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமையில் விவசாயிகள் நேற்று காலை குளத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் உள்ளிட்ட போலீசார் வந்தனர். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும், அதுவரை போராட்டத்தை கைவிடுமாறும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

அதன்படி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமையில் சமாதான     கூட்டம்     நடந்தது. மண்டல துணை தாசில்தார் சிவகுமார் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விதிமுறைகளை மீறி 3 அடி முதல் 7 அடி வரை குளத்தில் சரள் மண் அள்ளுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும், சரள்மண் அள்ளும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு பதிலளித்த தாசில்தார், திருச்செந்தூரில் இருந்து அம்ைப வரை சாலை அமைக்கும் பணிக்காக அனுமதி பெற்று சரள் மண் அள்ளப்படுகிறது. சரள் மண் அள்ளப்படும் இடத்தில் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்ற போராட்டக்குழுவினர் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக கூறி கலைந்து சென்றனர்.

Next Story