கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5.47 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.29½ கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி-அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 697 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.29½ கோடி மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி:
பொங்கல் பரிசு தொகுப்பு
கிருஷ்ணகிரியில் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். டாக்டர் செல்லகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்), டி.ராமச்சந்திரன் (தளி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, 5 லட்சத்து 47 ஆயிரத்து 697 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.29 கோடியே 47 லட்சம் மதிப்புள்ள பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது:-
வாழ்வாதாரத்திற்கு உதவி
தமிழக முதல்-அமைச்சர் தமிழர் திருநாளாம் பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 515 முழுநேர ரேஷன் கடைகள், 513 பகுதிநேர ரேஷன் கடைகள், 30 மகளிர் ரேஷன்கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும் ரேஷன்கடைகள் 36 என மொத்தம் 1,094 ரேஷன் கடைகள் மூலம் 5 லட்சத்து 47 ஆயிரத்து 697 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.27 கோடியே 66 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.1 கோடியே 81 லட்சம் மதிப்பில் முழு கரும்பு என மொத்தம் ரூ.29 கோடியே 47 லட்சம் மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
முககவசம் அணியுங்கள்
பொதுமக்கள் அனைவரும் ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும்போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் பதிவாளர் முருகன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், உதவி கலெக்டர் சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சக்திசரண், மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, முன்னாள் எம்.பி. வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் செல்வம், தாசில்தார் சரவணன், வட்ட வழங்கல் அலுவலர் மங்கை, துணைப்பதிவாளர் ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story