உத்தனப்பள்ளி அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பிளஸ்-2 மாணவி பரிதாப சாவு-டிரைவர், கண்டக்டர் கைது
உத்தனப்பள்ளி அருகே ஓடும் பஸ்சில் இருந்து குதித்தபோது சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை:
பிளஸ்-2 மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சினிகிரிப்பள்ளியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மனைவி ஆஷா. இந்த தம்பதிக்கு நவ்யா ஸ்ரீ (வயது 17) உள்பட 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். நவ்யா ஸ்ரீ கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தினமும் அரசு பஸ்சில் அவர் பள்ளிக்கு சென்று வந்தார்.
இந்தநிலையில் மாணவி நவ்யா ஸ்ரீ நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். மாலை பள்ளி முடிந்து அரசு பஸ்சில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பஸ்சை ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த வெங்கடேசன் (58) ஓட்டினார். பஞ்சப்பள்ளியை சேர்ந்த குமார் (46) கண்டக்டராக இருந்தார்.
பஸ்சில் இருந்து குதித்தார்
அரசு பஸ் மாணவியின் ஊரான சினிகிரிப்பள்ளியில் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது மாணவி நவ்யா ஸ்ரீ பஸ்சின் நடுப்பகுதியில் இருந்ததால் அவர் இறங்க தாமதம் ஏற்பட்டது. இதனை அறியாத டிரைவர் வெங்கடேசன் பஸ்சை இயக்கினார். இதனால் பதறிய மாணவி திடீரென பஸ்சின் முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே குதித்தார்.
அவர் எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கினார். இதில் அவருக்கு கை, கால் நசுங்கியது. இதனை பார்த்து பயணிகள் கூச்சலிட்டதால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவியை பயணிகள் மீட்டு சிகிச்சைக்காக உத்தனப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பலி
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி நவ்யா ஸ்ரீ நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார் விரைந்து சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருடைய உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
விபத்து தொடர்பாக டிரைவர் வெங்கடேசன், கண்டக்டர் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக டிரைவர், கண்டக்டரை கைது செய்தனர்.
பணி இடைநீக்கம்
இந்தநிலையில் டிரைவர் வெங்கடேசன், கண்டக்டர் குமாரை பணி இடைநீக்கம் செய்து தர்மபுரி மண்டல போக்குவரத்துத்துறை பொது மேலாளர் ஜீவரத்தினம் நேற்று உத்தரவிட்டார்.
பள்ளிக்கு சென்று திரும்பியபோது, ஓடும் பஸ்சில் இருந்து குதித்த பிளஸ்-2 மாணவி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் உத்தனப்பள்ளியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story