தாசில்தார் தலைமையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை
கண்மாய்க்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக தாசில்தார் தலைமையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தாலுகா மன்னவராதி கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடக்கோரி சிலுக்குவார்பட்டி உள்ளிட்ட 8 கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக, செங்கட்டாம்பட்டி ஓடையில் இருந்து சீத்தாபுரம் பாப்பன்குளம் கண்மாய்க்கு சென்ற தண்ணீரை அடைத்து, மன்னவராதி கண்மாய்க்கு பொதுப்பணித்துறையினர் திருப்பி விட்டனர்.
இதற்கு நூத்துலாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இதனையடுத்து சிலுக்குவார்பட்டி, நூத்துலாபுரம் கிராம விவசாயிகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
இதற்கு தாசில்தார் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். நிலக்கோட்டை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நீதிபதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருகிற 7-ந்தேதி காலை 10 மணி வரை மன்னவராதி கண்மாய்க்கு தண்ணீர் வழங்குவது என்றும், அதன்பிறகு 7-ந்தேதி காலை 10 மணி முதல் 17-ந்தேதி வரை சீத்தாபுரம் பாப்பன்குளம் மற்றும் குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய்களுக்கு தண்ணீர் திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் மண்டல துணை தாசில்தார் சரவணன், சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஜெயசீலன், நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சங்கிலி பாண்டியன், வருவாய் ஆய்வாளர் சென்னாகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராமமூர்த்தி, நவாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story