‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரடு, முரடான சாலை 

நாகை மாவட்டம் தாமரைகுளம் தென்கரை பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு, முரடாக போக்குவரத்துக்கு பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்பலி எதுவும் ஏற்படும் முன் தாமரை குளம் தென்கரை பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-மணி, நாகை.

ஆபத்தான பள்ளம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சட்டநாதபுரம் பகுதி கம்பன் நகர் 2-வது தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் தண்ணீர் வடிவதற்கு வழிவகை செய்யும் வகையில் அந்த பகுதியில் உள்ள சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தின் வழியாக தண்ணீர் வெளியேறி சென்றது. ஆனால், இந்த பள்ளம் மூடப்படாமல் இருக்கிறது. இதனால் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. மேலும், சாலை நடுவே பள்ளம் இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை நடுவே உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-கம்பன்நகர் தெருவாசிகள், சீர்காழி.

சாலை சீரமைக்கப்படுமா? 

நாகை மாவட்டம் வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் பாலம் கட்டப்பட்டுள்ள இடத்தில் சாலை சரிவர சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்களால் பள்ளிக்கு சைக்கிள்களில் செல்லும் மாணவ-மாணவிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைந்துவிடுகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்துக்குமார், திருத்துறைப்பூண்டி.

Next Story