தொழிலதிபர் வீட்டில் புகுந்து பணம் செல்போன் கொள்ளை
ஆரோவில் அருகே தொழில் அதிபரின் பண்ணை வீட்டுக்குள் புகுந்து பணம், செல்போன் கொள்ளையடித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள இடையஞ்சாவடி - கருவடிக்குப்பம் சாலையில் ஆந்திரே (வயது 32) என்பவர் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டில் நேபாளத்தை சேர்ந்த சிந்துரு (38) என்பவர் காவலாளியாக உள்ளார்.
நேற்று முன்தினம் மாலை ஆந்திரே மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள், தாகமாக இருக்கிறது தண்ணீர் வேண்டும் என்று காவலாளியிடம் கேட்டனர். அவர் வீட்டுக்குள் சென்று தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார்.
அதை குடித்த 3 பேரும், தங்களுக்கு மேலும் தாகமாக இருப்பதால் மீண்டும் தண்ணீர் கொண்டுவருமாறும், அதுவரை இங்கே இருப்பதாக கூறி பண்ணை வீட்டின் மெயின் கேட்டை திறக்குமாறு காவலாளியிடம் கூறினர்.
கத்தியை காட்டி மிரட்டல்
மர்மநபர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவலாளி கேட்டை திறக்க மறுத்துவிட்டார். அப்போது திடீரென்று மர்மநபர்களில் ஒருவன் கேட் மீது ஏறி உள்ளே குதித்து, காவலாளி கழுத்தில் கத்தியை வைத்து, கேட்டை திறக்கும்படி மிரட்டினான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உயிருக்கு பயந்து கேட்டை திறந்தார். உடனே மற்ற 2 பேருமு் உள்ளே புகுந்தனர். அங்கு காவலாளி அறையில் வைத்திருந்த ஒரு பையை தூக்கிக்கொண்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்ற பையில் ரூ.35 ஆயிரம் ரொக்கம் மற்றும் காவலாளி குடும்பத்தினரின் 4 செல்போன்கள் இருந்ததாக தெரிகிறது.
3 பேர் கைது
இதுகுறித்து காவலாளி சிந்துரு ஆரோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் குயிலாப்பாளையம் பகுதியை சேர்ந்த வாஞ்சிநாதன் (32), பெரிய முதலியார்சாவடியை சேர்ந்த தனஞ்செழியன் (19), புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்த யோகேஸ்வரன் (21) ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஆரோவில் முந்திரி தோப்பில் பதுங்கியிருந்த வாஞ்சிநாதன், தனஞ்செழியன் மற்றும் கோட்டக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நின்ற யோகேஸ்வரனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடித்த ரூ.35 ஆயிரம் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பண்ணை வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆரோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story